

பெரிய காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பிரம்மதேசம் அருகில் உள்ள கல்பட்டு கிராமத்தில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்களுடன் தனது பாட்டி வீட்டிற்கு சென்றார்.
கடந்த 19-ந்தேதி சுப நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் மாணவியிடம் பேச்சு கொடுத்தனர். பின்னர் மாணவியை மிரட்டி அங்கிருந்து அருகில் உள்ள தோட்டத்திற்கு கடத்தி சென்றனர். பின்னர் மாணவியை கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவி காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறுமி கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
இது போன்ற ஈவிரக்கமற்ற கும்பலுக்கு எதிராக நடடிக்கை எடுக்க வேண்டும். சிறுமிகளுக்கு எதிரான வன்முறை என்பது மனித உரிமைகளின் பெரும் மீறலாகும். இந்த மிருகத்தனமான செயலை ஆணையம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களுக்கு உடனடி கடுமையான சட்ட நடவடிக்கையும் தேவை.
பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையை உடனடியாகப் பதிவு செய்யவும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் உடனடியாகக் கைது செய்யவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும், தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
5 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை தமிழக போலீசார் சமர்பிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.