

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். காமராஜ், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது.
எஸ். காமராஜின் இன்றைய செயல்பாடு, அவரின் வெற்றிக்காகப் பாடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் இழைத்திருக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
ஆகவே, கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும். கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், எஸ். காமராஜ் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் மெஜாரிட்டிக்கான பல்வேறு கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது காமராஜ், த.வெ.க.-வை ஆதரித்து கடிதம் கொடுத்தார். அந்த கடிதம் போலி என டிடிவி தினகரன் ஆளுநரிடம் புகார் தெரிவித்தார். அந்த கடிதத்தில் நான் கையெழுத்திடவில்லை என்று காமராஜ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் பதவி ஏற்றதும், 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். இது தொடர்பாக அவர் முதல்வர் விஜயை பாராட்டியிருந்தார்.