

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி மார்க்கமாக பரங்கிமலை வரை மின்சார ரெயில் இயக்கம் தொடங்கி உள்ளது. இந்த வழித்தடத்தில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன.
இதில் பணிபுரிகின்ற ஊழியர்கள் இந்த ரெயிலில் பயணிக்கிறார்கள். குறிப்பாக திருவான்மியூரில் இருக்கும் டைடல் பார்க்கில் பணிபுரியும் மென்பொறியாளர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் இந்த வழித்தடத்தில் பயணம் செய்கிறார்கள்.
டைடல் பார்க்கில் இருந்து திருவான்மியூர் ரெயில் நிலையத்திற்கு செல்வதற்காக ரோட்டின் குறுக்கே நடை மேம்பாலங்கள் வெளிநாடுகளையும் மிஞ்சும் வகையில் பிரமாதமாக அமைக்கப்பட்டு உள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் பணி முடிந்து ஏராளமானவர்கள் இந்த ரெயில் நிலையத்திற்கு வருகிறார்கள். ரெயில் நிலையத்திற்குள் நுழையும் போது வேளச்சேரி மார்க்கத்தில் செல்லும் ரெயிலில் பயணிப்பவர்கள் படிக்கட்டு வழியாக இறங்கி செல்ல வேண்டும். மறுமுனை நடைமேடைக்கு செல்லும் படிக்கட்டு பாதை முழுவதும் இரவு நேரத்தில் மரண குகை போல் காட்சி அளிக்கிறது. மின்விளக்கு வசதி எதுவும் இல்லை. அதுமட்டுமல்ல முற்றிலும் குப்பை கூளங்கள் நிறைந்து ஆங்காங்கே சிதறி கிடக்கும் மதுபாட்டில்களையும் பார்க்கும் போது பலர் அந்த பகுதியில் அமர்ந்து தண்ணி அடிப்பது தெளிவாக தெரிகிறது.
இளம் மென்பொறியாளர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் ஆயிரக்கணக்கில் வந்து செல்லும் இடம். இதில் அவர்களுக்கு பாதுகாப்பு முக்கியம். இந்த சூழ்நிலையில் இந்த ரெயில் நிலையம் பாதுகாப்பற்றதாக காட்சி அளிக்கிறது. நடந்து செல்பவர்கள் இரவில் செல்போன் வெளிச்சத்தில் படிக்கட்டுகளில் ஏறுகிறார்கள். ஒன்றிரண்டு பெண்கள் தனியாக வந்தால் ஆண்கள் வருவதை எதிர்பார்த்து நிற்கிறார்கள். அவர்கள் வரும் போது அவர்களோடு இணைந்து செல்கிறார்கள். தனியா செல்வதற்கு பயப்படுகிறார்கள்.
உலகளாவிய என்ஜினீயர்கள் பணியாற்றுகிற இடம். ரெயில் நிலையம் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் உள்பகுதியில் இப்படி அலங்கோலமாக பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை பார்த்தால் என்ன நினைப்பார்கள். இவைகளை கண்டுகொள்ள வேண்டியவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் வேதனை.