என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தனி சின்னத்தில் போட்டியா? - தி.மு.க. கூட்டணியில் 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்:  ஜவாஹிருல்லா பேட்டி
    X

    தனி சின்னத்தில் போட்டியா? - தி.மு.க. கூட்டணியில் 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா பேட்டி

    • பா.ஜ.க.வின் நெருக்கடியையே சமாளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதையும் சுமூகமாக தீர்த்து வெற்றிக் கூட்டணி அமைப்பார்.
    • தமிழ்நாட்டுக்கு எந்தவித தியாகமும் செய்யாமல் திரைப்படத்தில் நடிப்பதை மட்டுமே தொழிலாக கொண்டு அரசியல் களத்தில் ஒருவர் குதித்து இருக்கிறார்.

    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சியின் 18-வது ஆண்டு விழா சென்னை மண்ணடியில் உள்ள அந்த கட்சியின் தலைமை வளாகத்தில் இன்று நடைபெற்றது.

    கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கட்சி கொடியை ஏற்றி வைத்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக மனித நேய மக்கள் கட்சி பாடுபட்டு வருகிறது. இந்த 18 ஆண்டு காலத்தில் தமிழ்நாடு பல்வேறு பேரிடர்களால் பாதிக்கப்பட்டபோது களத்திற்கு சென்று மக்களை மீட்கக் கூடிய பணிகளையும், அவர்களுக்கு நலத்திட்டங்களையும் மனிதநேய மக்கள் கட்சி செய்து வந்துள்ளது. இந்த சிறப்பான பணிகளை தொடருவோம்.

    தமிழ்நாட்டில் உள்ள பெரிய அரசியல் கட்சிகளுக்கு இணையான அரசியல் அதிகாரத்தில் உரிய பங்கீடு தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திய மாநாடு மதுரையில் நடந்தது. அந்த மாநாட்டில் அரசியல் அதிகாரத்தில் பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும், உள்ளாட்சி மன்றத்திலும் சிறுபான்மை முஸ்லீம்கள், சிறுபான்மை கிறிஸ்தவர்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருக்கிறது. மக்கள்தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

    அந்த அடிப்படையில் தமிழக சட்டமன்றத்தில் 234 உறுப்பினர்களில் மக்கள்தொகை அடிப்படையில் 14 முஸ்லீம் எம்.எல்.ஏ.க்கள் இருக்க வேண்டும்.

    வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமு.க.வின் தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இடம்பெற்று இருக்கிறது. இந்த கூட்டணியின் வெற்றிக்காக தமிழ்நாடு முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்கள் அயராது பணியாற்றுவார்கள்.

    இந்த தேர்தலில் தொகுதிகள் ஒதுக்கும்போது மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க.வை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

    இதே போல் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும், தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளில் இருக்கும் சிறுபான்மை மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளித்து வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும்.

    இதுவரை நடந்த தேர்தல்களில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஒரு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. அந்த வழக்கில் வரக்கூடிய தீர்ப்பின் அடிப்படையில் தனி சின்னத்தில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பது குறித்து எங்கள் முடிவு அமையும். வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை தி.மு.க.விடம் கேட்டு பெறுவோம். கூட்டணி கட்சிகளால் தி.மு.க.வுக்கு நெருக்கடி இல்லை. இது தேர்தல் நேரத்தில் வழக்கமாக நடக்கும் விஷயங்கள்தான்.

    பா.ஜ.க.வின் நெருக்கடியையே சமாளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதையும் சுமூகமாக தீர்த்து வெற்றிக் கூட்டணி அமைப்பார்.

    தமிழ்நாட்டுக்கு எந்தவித தியாகமும் செய்யாமல் திரைப்படத்தில் நடிப்பதை மட்டுமே தொழிலாக கொண்டு அரசியல் களத்தில் ஒருவர் குதித்து இருக்கிறார். இவர்கள் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடியதே இல்லை.

    பேசுவதெல்லாம் வெறும் தத்துவம்தான். ஊழலை ஒழிப்போம் என்று பேசுகிறார். ஆனால் அவருக்கு வரி பாக்கிக்காக ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது செல்லும் என்று கோர்ட்டு கூறி உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டை தலைநிமிர வைக்க மாட்டார்கள்.

    பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பிரதமர் மோடி ஓடி ஒளிந்து வருவது மிகவும் கேவலமான செயலாக இருக்கிறது. சபாநாயகருக்கு பின்னால் பிரதமர் மோடி ஒளிந்து கொண்டு இருக்கிறார். மோசமான பொய்களை பா.ஜ.க. சார்பில் பரப்புகிறார்.

    பாராளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சி பெண் உறுப்பினர் பிரதமர் மோடியை தாக்க முன்வந்தார் என்று சொல்வது அப்பட்டமான பொய். பிரதமர் மோடி பாராளுமன்றத்தை பார்த்து பயப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×