‘கடந்த ஆட்சியிலும் இதே பணியாளர்கள்தான்... அவர்களை வைத்துதான் தடையில்லாமல் மின்சாரம் வழங்கினோம்’ - செந்தில் பாலாஜி!

எதார்த்தத்தை தவெக அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்.
‘கடந்த ஆட்சியிலும் இதே பணியாளர்கள்தான்... அவர்களை வைத்துதான் தடையில்லாமல் மின்சாரம் வழங்கினோம்’ - செந்தில் பாலாஜி!
Published on

தமிழ்நாட்டின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையைத் தொடர்ந்து, இன்று மின்சாரத்துறைக்கான வெள்ளை அறிக்கையை தவெக அரசு வெளியிட்டது. இந்த வெள்ளை அறிக்கை தொடர்பாக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,

“எங்கு பார்த்தாலும் பணியாளர் பற்றாக்குறை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். கடந்த ஆட்சியிலும் இதே பணியாளர்கள் இருந்தனர். அவர்களை வைத்துதான் மின்தடை இல்லாமல் மின்சாரம் வழங்கினர். முதலமைச்சர் விஜய் நேற்று பணி ஆணை வழங்கியவர்கள் எல்லோருமே திமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டவர்கள்தான்.

ஏதோ இந்த 40 நாளில் அறிவிப்பு வெளியிட்டு, தேர்வு நடத்தி, முடிவுகள் அறிவித்து, தேர்வு செய்யப்பட்டது போல ‘வெளிப்படையாக தேர்வு நடந்தது’ என ரீல்ஸ் வெளியிடப்படுகிறது.

அந்த 401 பணியிடங்களுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெற்றது. தேர்தல் இல்லாமல் இருந்திருந்தால் நாங்களே ஆணைகளை கொடுத்திருப்போம். எதார்த்தத்தை தவெக அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளில் 122 துணைமின் நிலையங்கள் கொண்டுவரப்பட்டன. 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரான்ஸ்ஃபார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். மின்மாற்றிகளை மாற்றுவது என்பது ஆண்டுதோறும் நடைபெறும் ஒன்று. இது புதிய அரசுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கும்.

திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் அரசு தவெக அரசு. பணி நியமன ஆணைகளிலும் அவர்களின் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர். இந்த வருடம் மின்கட்டண உயர்வு இருக்காது எனக்கூறிவிட்டு, வருவாய் இழப்பும் ஏற்படாது என தெரிவித்துள்ளார். இது எப்படி சாத்தியம்?” என கேள்வி எழுப்பினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com