Gas Shortage | வணிக சிலிண்டர் தட்டுப்பாடு - 'திருநெல்வேலி அல்வா' தயாரிப்பு நிறுத்தம்

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு திருநெல்வேலியின் அடையாளமாக திகழும் 'அல்வா' தயாரிப்பையும் விட்டுவைக்கவில்லை.
Gas Shortage | வணிக சிலிண்டர் தட்டுப்பாடு - 'திருநெல்வேலி அல்வா' தயாரிப்பு நிறுத்தம்
Published on

அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் இடையிலான மேற்காசிய போர் பதற்றத்தால் சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் கியாஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. வீட்டு உபயோக சிலிண்டர் மட்டும் தட்டுப்பாடு இன்றி வழங் ப்படுகிறது. அதே நேரத்தில் வணிக கியாஸ் சிலிண்டர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இது நாடு முழுவதும் பல்வேறு வகையிலான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டல்கள், டீக்கடைகளில் உற்பத்தியை பாதிக்க செய்திருப்பதுடன், விலைவாசியையும் உயர்த்தி உள்ளது.

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு திருநெல்வேலியின் அடையாளமாக திகழும் 'அல்வா' தயாரிப்பையும் விட்டுவைக்கவில்லை.

திருநெல்வேலி என்றாலே நினைவுக்கு வரும் முக்கிய அடையாளங்களில் ஒன்று தித்திப்பான 'அல்வா'. ஆனால் அதுவும் சுவை தராமல் போய்விடும் சூழ்நிலையை கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக வணிக கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறைந்த அளவில் மட்டுமே சிலிண்டர்கள் வழங்கப்பட்டதால், இனிப்பு தயாரிப்பு நிறுவனங்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளன.

இதன் விளைவாக, நெல்லை சந்திப்பில் உள்ள பிரபல 'அல்வா' விற்பனை நிறுவனமான சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் கடந்த சில நாட்களாகவே இனிப்பு மற்றும் கார வகைகளின் தயாரிப்பு குறைக்கப்பட்டிருந்தது. தற்போது வணிக கியாஸ் சிலிண்டர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதால், கையிருப்பில் இருந்த கியாஸ் தீர்ந்து போய்விட்டது.

இதனால், 'அல்வா' தயாரிப்பது தற்காலிகமாக நிறுத்த அந்த நிறுவன நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போதைய கையிருப்பில் இருந்த 'அல்வா' நேற்று மட்டுமே விற்பனைக்கு போதுமானதாக இருந்தது. இதனால், இன்று (புதன்கிழமை) முதல் 'அல்வா' கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த பாதிப்பு 'அல்வா' பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியன் கூறுகையில், 'வணிக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக 'அல்வா' தயாரிப்பில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை சமாளிக்க மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இருப்பினும், தற்போதைய நிலவரத்தில் 'அல்வா' தயாரிப்பது நேற்று வரை மட்டுமே சாத்தியம். இன்று முதல் விற்பனை தொடருமா? என்பது குறித்து உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. சிலிண்டர் பிரச்சனை விரைவில் தீரும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் நீடித்து வருவதால் மாற்றுவழிகளை தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது' என்றார்.

இந்த ஸ்வீட்ஸ் கடையில் தினமும் 5 ஆயிரம் கிலோ வரை 'அல்வா' விற்பனையாகும். சபரிமலை சீசன் காலங்களில் இருமடங்கு விற்பனை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் 'அல்வா' தயாரித்து விற்பனை செய்யும் சிறிய கடைகளும் இந்த பாதிப்பை சந்தித்து உள்ளது.

இதே நிலை நீடித்தால் அடுத்த சில தினங்களில் புகழ்பெற்ற 'திருநெல்வேலி அல்வா' நெல்லைக்காரர்களுக்கு கூட கிடைக்காத நிலை ஏற்படும் சூழல் உள்ளது. அவ்வாறு மாற்று எரிபொருளை கொண்டு 'அல்வா' தயாரிக்கும் பட்சத்தில் அதன் விலை உயரும் என்று கூறப்படுகிறது.

இதுதவிர நெல்லையில் உள்ள மற்றொரு பிரபல நிறுவனமான இருட்டுக்கடை 'அல்வா' தயாரிப்பில், ஜப்பான் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதால், கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இருந்த போதிலும் மற்ற கடைகளை விட இருட்டுக்கடை 'அல்வா' கிலோ ரூ.400-ல் இருந்து ரூ.440-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த கடைக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து உயர் ரக கோதுமை கொண்டு வரப்படுகிறது. போர் ஏற்பட்ட பிறகு கோதுமை விலை உயர்ந்து வருவதுடன், நெய் விலையும் உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக 'அல்வா' கிலோ ரூ.40 உயர்த்தி உள்ளோம் என்று உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com