

ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகினையும், சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகா உள்பட பல்வேறு வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
குறிப்பாக கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் இங்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். சுற்றுலா பயணிகள் அதிகமாக வரக்கூடிய ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் என்பது பெரும் சவாலாகவே மாறி உள்ளது.
வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வருவார்கள் என்பதால், அந்த சமயங்களில் தான் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
ஆனால் தற்போது சாதாரண நாட்களில் கூட ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை என தொடர் விடுமுறை காரணமாக ஊட்டிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு நேற்றுமுன்தினம் மாலை முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால் ஊட்டியில் உள்ள முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக ஆர்.டி.ஓ. அலுவலகம், சேரிங்கிராஸ், படகு இல்ல சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றிருந்தன. போலீசார் போக்குவரத்தை சீர்படுத்தி வாகனங்களை அனுப்பினர்.
ஊட்டி நகரில் ஆர்.டி.ஓ. அலுவலகம், சேரிங்கிராஸ், படகு இல்ல சாலை, மிஷினரி ஹல், தேவாங்கர் மண்டபம், செயின்ட் ஆன்டனி தேவாலயம், கோத்தகிரி சாலை, அரசு கலைக்கல்லூரி, ஸ்டோன்ஹவுஸ் சாலை, ப்ரீக்ஸ் பள்ளி சாலை, காபிஹவுஸ் மார்க்கெட், மாரியம்மன் கோவில் சந்திப்பு, பஸ் நிலையம், படகு இல்ல சாலை, எட்டின்ஸ் சாலை, டேவிஸ்டேல், ஸ்டேட் வங்கி சந்திப்பு போன்ற பகுதிகளில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சாலையோரங்களில் வாகனங்களை கட்டுப்பாடின்றி நிறுத்தி விடுகின்றனர். இதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகிறது. எனவே போலீசார் இந்த பகுதிகளில் உயர் போலீசார் நேரடியாக கண்காணிப்பில் ஈடுபடுவதுடன், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.