200 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் அமல் - மின்சார கட்டணம் எவ்வளவு குறைகிறது?

200 யூனிட் இலவச மின்சார நடைமுறை கடந்த 10-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
200 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் அமல் - மின்சார கட்டணம் எவ்வளவு குறைகிறது?
Published on

200 யூனிட் இலவச மின்சார திட்டம் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் மின்சார கட்டணம் எவ்வளவு குறைகிறது? என்ற தகவல்களை மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிபடி வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நடைமுறை அமலில் இருந்து வரும் நிலையில், தற்போது புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், பதவியேற்ற உடன் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் வீடுகளில் 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, அடுத்த 2 மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பும் ஒன்றாகும். அதற்கான அரசாணையும் உடனடியாக வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், 200 யூனிட் இலவச மின்சார நடைமுறை கடந்த 10-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மின்சார கட்டணத்தில் எவ்வளவு பணம் மிச்சம் ஏற்படும் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு வீடுகளுக்கு 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. தற்போது 200 யூனிட் மின்சாரம் அடுத்த 2 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.235 மிச்சமாகும். 200 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு இதன் மூலம் மின்சார கட்டண தொகையில் எவ்வளவு மிச்சம் ஏற்படும் என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மின்சார கட்டணத்தில் பணம் மிச்சம் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com