

தமிழ்நாட்டில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் இன்று (மே.15) வேளாண் துறை இயக்குநர் வி.முருகேஷ், மாநில மனித உரிமை ஆணைய செயலராகவும், மீன்வளத் துறை இயக்குநர் முரளிதரன், வேளாண் துறை இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் முதன்மைச் செயலாளராக இருந்த வெங்கடேஷ் கைத்தறி, கைவினைப்பொருட்கள், துணிநூல் மற்றும் கதர்த் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் உயர் கல்வித்துறை செயலாளர் P. சங்கர், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தட்சிணாமூர்த்தி, ஐஏஎஸ்க்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஆணையர் லதா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகப் நியமிக்கப்பட்ட கே. நந்தகுமார், இ.ஆ.ப. ஐஏஎஸ்க்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
காயத்ரி கிருஷ்ணன் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணைய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியைக் கூடுதல் பொறுப்பாக வகித்து வந்த கிரண் குராலாவிற்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.