மேஜிக் நம்பர் 118-ஐ தொட்டது எப்படி?- த.வெ.க. கடந்து வந்த பாதை!

6-ந்தேதியில் இருந்து இன்று இரவு வரை கடும் சோதனைகளை சந்தித்து மெஜாரிட்டியை நிரூபித்து த.வெ.க. விஜய் முதல்வர் ஆணையை ஆளுநரிடம் பெற்றுள்ளார்.
மேஜிக் நம்பர் 118-ஐ தொட்டது எப்படி?- த.வெ.க. கடந்து வந்த பாதை!
Published on

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற்றது. திமுக, அதிமுக கூட்டணியுடன் விஜயின் தமிழக முன்னேற்றக் கழகம் போட்டியிட்டது. முதன்முறையாக போட்டியிட்டதால், விஜய் உடன் கூட்டணி சேர மற்ற கட்சிகள் தயக்கம் காட்டின.

இதனால் மக்கள் மீது நம்பிக்கை வைத்து தனியாக களம் இறங்கினார். அவர் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். விஜய் 20 சதவீதத்திற்குள் வாக்குகள் வாங்குவார். அவர்கள் இரண்டு தொகுதியில் ஒன்றில் கூட வெற்றி பெற சந்தேகம். திமுக கூட்டணி வாக்கை பிரிப்பாரா? அல்லது அதிமுக கூட்டணியின் வாக்கை பிரிப்பாரா? என்பது இந்த தேர்தலின் முக்கியமானதாக இருக்கும். அவருக்கு கூடும் கூட்டம் வாக்காக மாறாது என்று விமர்சகர்கள் தெரிவித்தனர்.

ஆனால், கடந்த 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியும் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகப்படியான இடங்களை பிடித்தது. விஜய் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். அதிக இடங்களை பிடித்த போதிலும் மேஜிக் நம்பரான 118-ஐ எட்டவில்லை. 108 இடங்களை மட்டுமே பெற்றது.

அதன்பின் 4-ந்தேதியில் இருந்து விஜயின் தமிழக வெற்றிக் கழகம கடந்து வந்த பாதையை பார்ப்போம்.

மே 4-ந்தேதி தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்தது.

மே 5-ந்தேதி காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை கேட்டு த.வெ.க. பேச்சுவார்த்தை நடத்தியது. அதேவேளையில் அதிமுக வெளியில் இருந்து ஆதரவு அளிக்க இருப்பதாகவும் செய்தி வெளியானது.

மே 6-ந்தேதி காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி த.வெ.க.வுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. இதற்கிடையே த.வெ.க.-வுக்கு ஆதரவு இல்லை என அதிமுக தெரிவித்தது.

விசிக, கம்யூனிஸ்டு கட்சிகள் உயர்மட்ட குழுவை சந்தித்து ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்போம் எனத் தெரிவித்தது.

இதனால் த.வெ.க.-வுக்கு ஆதரவு கிடைக்காத நிலை ஏற்பட்டது. இரவு 7 மணிக்குப் பிறகு திமுக- அதிமுக இடையே கூட்டணி உருவாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக செய்திகள் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் இதை மறுத்தார்.

மே 7-ந்தேதி த.வெ.க.வால் ஆட்சி அமைக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் விஜய் எதற்கும் பதில் அளிக்காமல் மவுனமாக இருந்தார். கட்சி தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். முக்கிய முடிவு எடுக்கப்போகிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்தார். 2 நாள் காத்திருங்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதனால் பெரிய குழப்பம் நீடித்தது.

மே 8-ந்தேதியான இன்று த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்து, த.வெ.க. எம்.எல்.ஏ.-க்கள் குழம்ப வேண்டாம். எவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் என்று தலைவருக்கு விசுவாசமாக இருங்கள் எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே கம்யூனிஸ்டு கட்சிகள் இன்று மதியம் ஆலோசனை நடத்தி வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக தகவல் வெளியானது. இதனால் த.வெ.க. 118-க்கான இடத்தை நெருங்கியது. இரவு விசிக ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது. இதனால் 118 ஆக உயர்ந்தது. விஜய் 2 இடத்தில் போட்டியிட்டதால் ஒரு இடத்தை கழிக்க வேண்டும். இதனால் 118 என மேஜிக் நம்பரை தொட்டது. இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது. பின்னர் இல்லை என்று பின்வாங்கியது.

இதனால் 9-ந்தேதி விஜய் முதல்வராக பதவி ஏற்கலாம் என தகவல் வெளியானது. ஆனால் ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்காமல் இழுத்து அடித்தது.

இதற்கிடையே விசிக அதிகாரப்பூர்வ கடிதம் வழங்காததால்தான், கவர்னர் அழைக்கவில்லை என்ற செய்தி வெளியானது. இந்த குழப்பத்திற்குள் இரவு 9 மணியளவில் திடீரென திருமாவளவன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். வி.சி.க. முடிவு குறித்து திருமாளவன் மவுனம் காத்து வந்தார். இதனால் 116 எண்ணிக்கையுடன் த.வெ.க.-வுக்கு மெஜாரிட்டி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

அதேவேளையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிந்தனை செல்வன், வன்னி அரசு விசிக-வுக்கான காலம் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தனர். இது த.வெ.க.வின் ஆதரவை உறுதிப்படுத்துவதாக இருந்தது.

இருந்தாலும் விசிக அதிகாரப்பூர்வ கடிதத்தை அனுப்பாததால் குழப்பமான நிலை ஏற்பட்டது. இதற்கிடையே அமமுக வேட்பாளரின் ஆதரவை மோசடியாக பெற்றதாக டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பாக ஆளுநரையும் சந்தித்தார். இதனால் 8-ந்தேதி ஆளுநரிடம் இருந்து அழைப்பு ஏற்க முடியாமல் போனது.

9-ந்தேதி (இன்று) காலை விசிக தனது முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விசிக காலை அறிவிப்பை வெளியிடவில்லை. மாலை 4 அணிக்கு அறிவிப்பை வெளியிடுவோம் என்று அறிவித்தது. சுமார் 4.30 மணியளவில் ஆதர் அர்ஜுனாவிடம் ஆதரவு கடிதத்தை விசிக வழங்கியது.

அத்துடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கும் ஆதரவு கொடுத்தது. 120 என்ற எண்ணிக்கையுடன் மாலை 5.45 மணியளவில் கவர்னரை சந்திக்க சென்றார். ஆனால், கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை என்ற தகவல் கிடைத்து பாதி வழியிலேயே திரும்பினார். கவர்னர் கேரளாவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர் 6.30 மணிக்கு சந்திக்க நேரம் வழங்கினார். அவர் ஆதரவு கட்சி தலைவர்களுடன் ஆளுநரை சந்தித்தார். சுமார் 1.30 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்திய நிலையில், விஜயை தமிழக முதலமைச்சராக நியமிப்பதற்கான ஆணையை ஆளுநர் அர்லேகர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பதவி ஏற்கிறார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com