

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரியலூர் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு கவுள்பாளையத்தில் கூடியிருந்த மக்களிடையே உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஸ்டாலின் எப்போதும் மோடி, பாஜக பற்றி பேசுவார். இபிஎஸ் பாஜக அடிமை என்பார். அவரிடம் பேச வேறு சரக்கு இல்லை. உங்களுக்கு தில்லு இருந்தால் அதிமுக பற்றி பேசுங்கள், பதில் சொல்லத் தயார். அதை விடுத்து மக்களைக் குழப்பினால் 100% தோல்விதான்.
மோடி பற்றி அவர் அப்பா கருணாநிதியே, மோடி மிகவும் நல்லவர் என்று பேசியிருக்கிறார். (பேப்பர் ஆதாரம் காட்டுகிறார்), எப்போதும் அப்பா வழியில் நடக்கிறேன் என்கிறார். அப்படி என்றால் இவரும் பாராட்டணும்.
நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் உதயநிதி பேசுகிறார். ஒரு காலத்தில் கூட்டணி அமைப்போம், சில நேரத்தில் கூட்டணி அமைப்பதில்லை, கூட்டணியில் இல்லாதபோது பேசிய பேச்சை எடுத்துக்கொண்டு இப்போது பேசுகிறார். பால்டாயில் குடித்தவரெல்லாம் பஞ்ச் டயலாக் பேசுகிறார்.
கருணாநிதி காங்கிரஸ் கூட்டணியை கூடா நட்பு கேடாய் முடிந்தது என்று சொன்னார். அந்த காங்கிரசோடுதான் கூட்டணி வைத்துள்ளீர்கள். 2014-ல் ஸ்டாலின், யாருடன் கூட்டணி என்பதை விட யாருடன் கூட்டணி இல்லை என்பதே முக்கியம், இனி ஒருபோதும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்றார். பிறகு எதுக்கு கூட்டணி வைத்தீர்கள்?
உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? மதுரையில் ஒருமுறை இந்திரா காந்தி காரில் போகும்போது கடுமையாக தாக்கப்பட்டார், தலையில் ரத்தம் வந்தது, அப்போது கருணாநிதி மாதவிடாய் ரத்தம் என்று பேசினார். அப்படி பேசிய திமுக-வோடு காங்கிரஸ் கூட்டணி வைக்கலாமா?
கருணாநிதி தமிழினத் துரோகி, வேறு ஏதாவது தொழில் செய்யலாம் என்று கரித்துக் கொட்டிய வைகோவுடன் கூட்டணி. அது எவ்வளவு பெரிய வார்த்தை?. கருணாநிதி கருநாகம் என்று பேசியவர் திமுக-வோடு இருக்கிறார். தேமுதிக, மநீம எல்லோரும் திமுக-வை விமர்சித்தவர்கள்.
அதனால் அவதூறாகப் பேசுவதை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும். நாவடக்கம் தேவை. நான் கிராமத்துக்காரன் எப்படி பேச வேண்டும் என்பது தெரியும். உங்களைப் போல சொகுசாக வாழ்ந்தவன் இல்லை. எதற்கும் பயப்பட மாட்டோம். இனி அவதூறு பேசினால் எங்கள் தொண்டனே பதிலடி கொடுப்பான்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.