சென்னையில் 5 நாட்கள் அனல் காற்று வீசும்- கடும் வெப்பத்தால் பொதுமக்கள் அவதி

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
சென்னையில் 5 நாட்கள் அனல் காற்று வீசும்- கடும் வெப்பத்தால் பொதுமக்கள் அவதி
Published on

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் பரவலாக இருந்தாலும் உச்ச கட்டமாக நேற்று சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தியது.

தலைநகர் சென்னையில் 107 டிகிரி வெயில் பதிவானது. கோடை காலத்தில் அதிகபட்சமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்தது. சுட்டெரித்த வெயிலுக்கு இடையே அனல் காற்றும் வீசியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் வெப்பத்தை தாங்க முடியாமல் நிழலை தேடி ஒதுங்கினார்கள். மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் இருந்தது. தமிழ்நாட்டிலேயே நேற்று சென்னையில் தான் அதிக அளவு வெயில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போதிலும் அது இரவிலும் உஷ்ணத்தை வெளியேற்றியது. பொதுமக்கள் புழக்கத்திலும் வியர்வையிலும் அசாதாரணமான சூழலை அனுபவித்தனர்.

சாலையில் வீசிய அனல் காற்றால் வாகனத்தில் சென்ற பொதுமக்களும் பஸ், ரெயில்களில் சென்றவர்களும் கஷ்டப்பட்டனர். சிறு குழந்தைகள், முதியவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள்.

இந்த நிலையில் மேலும் 5 நாட்கள் சுட்டெரிக்கும் வெயில் தாக்கம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து அதன் இயக்குனர் துரை கூறியதாவது:- வடமேற்கு திசையில் இருந்து அனல் காற்று வீசுகிறது. அதனால் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் அனல் காற்று இருக்கும். வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கும். 42 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதே அளவு வருகிற 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் இருக்க வாய்ப்பு உள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதுவரையில் அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் சென்னையில் பதிவாகியுள்ளது. அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் கோவை மாவட்டம் மலை பகுதி, நீலகிரி, தேனி, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com