ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு- குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிக்கிறது

அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு- குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிக்கிறது
Published on

ஒகேனக்கல்:

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 23 ஆயிரத்து 994 கனஅடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்று காலை அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் கர்நாடக மாநிலத்திலும் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளின் பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 23 ஆயிரத்து 994 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து அதிகரித்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையானது தொடர்ந்து 4-வது நாளாக நீடிக்கிறது. நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை இன்று 3-வது நாளாக நீடிக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com