

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள, கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் திறந்து விடப்படும் உபரிநீர் வெளியேற்றத்தின் அளவு கூடுவதும், குறைவதுமாக உள்ளது.
இந்த நிலையில் கா்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் குறைந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
இருப்பினும் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி போன்ற அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க இன்று குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.