ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கடந்த 2 தினங்களாக கனமழை பெய்துள்ளது. தண்ணீர் குறைந்து பாறைகள் தெரிந்த நிலையில் தற்போது பாறைகள் தெரியாத வகையில் முழ்கியவாறு தண்ணீர் பாய்ந்து ஓடின.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த சில தினங்களாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. இதனால் நேற்று காலை 300 கனஅடி தண்ணீர் வந்தது.

இந்த நிலையில் கர்நாடகா, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்துள்ளது. இதனால் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

நேற்று மாலை 2 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்றுகாலை 8 மணி நிலவரப்படி 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தண்ணீர் குறைந்து பாறைகள் தெரிந்த நிலையில் தற்போது பாறைகள் தெரியாத வகையில் முழ்கியவாறு தண்ணீர் பாய்ந்து ஓடின. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com