தமிழகத்தில் அதிகபட்சமாக பரமத்திவேலூரில் 100.4 டிகிரி வெயில் பதிவானது

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்தனர். ஓட்டு வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மிகவும் சிரமப்பட்டனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக பரமத்திவேலூரில் 100.4 டிகிரி வெயில் பதிவானது
Published on

பரமத்திவேலூர்:

தமிழகத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசியில் இருந்தே வெயில் உக்கிரம் காட்ட தொடங்கி விட்டது. எல்நினோ தாக்கத்தால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் முதல் வாரத்திலேயே தமிழ்நாட்டில் சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தொட ஆரம்பித்துவிட்டது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சுள்ளிப்பாளையம், சோழசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, குரும்பல மகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லிகோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், பெரியசோளிபாளையம், கபிலர்மலை, இருக்கூர், கோப்பணம் பாளையம், கொந்தளம், சேளூர், பிலிக்கல் பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், பாண்டமங்கலம், வெங்கரை, பொத்தனூர், பரமத்தி, நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளி கிழங்கு, கரும்பு, வெற்றிலை, வாழை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த பகுதியில் நேற்று அதிக அளவில் வெயில் அடித்ததால் தோட்டங்களில் கூலி வேலை செய்து கொண்டிருந்த கூலி தொழிலாளர்கள் தோட்டத்தில் வேலை செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். அதேபோல் தார் சாலைகளில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளும், அத்தியாவசிய காரணங்களுக்காக நடந்து சென்ற பொதுமக்களும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சிரமத்திற்கு உள்ளாகினர்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சாலையோர இளநீர் கடைகளுக்கு சென்று வாகன ஓட்டிகள் இளநீர் வாங்கி பருகியதை காணமுடிந்தது. மேலும் தர்பூசணி கடைகள், வெள்ளரிக்காய் விற்பனை செய்யும் கடைகளில் வியாபாரம் களை கட்டியது.

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்தனர். குறிப்பாக ஓட்டு வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மிகவும் சிரமப்பட்டனர். 100.4 டிகிரி வெயில் நிலவியதால் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவில் தூங்கமுடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

கடந்த காலங்களில் அருகாமையில் உள்ள கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் தொடர்ந்து வெயில் சதத்தை தாண்டி வந்த நிலையில் தற்போது பரமத்திவேலூர் பகுதியில் முதன்முறையாக 100.4 டிகிரியை பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. கோடைகாலம் தொடங்கும் முன்பே தற்போது 100.4 டிகிரி வெயில் பதிவாகி உள்ளதால் அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் மேலும் கடுமையாக இருக்கும் என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பொதுமக்கள் பழங்கள், மோர், வெள்ளரிக்காய், தர்பூசணி உள்ளிட்ட நீர்ச்சத்தான உணவுகளை சாப்பிட டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதேபோல் சேலத்தில் நேற்று 99.7 டிகிரி வெயில் பதிவானது. பகல் நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மாலை 5.30 மணி வரை வெயிலின் தாக்கம் நிலவியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com