சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 3 மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்டது ஐகோர்ட்

போலீசார் ஜாமின் கேட்ட மனுக்கள் தள்ளுபடி ஆகியிருந்தன. போலீஸ்காரர் வெயிலுமுத்துக்கு மதுரை ஐகோர்ட் ஜாமின் வழங்கியது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 3 மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்டது ஐகோர்ட்
Published on

மதுரை:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர்.

இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர் வெயிலுமுத்து உள்ளிட்ட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் ஜாமின் கேட்ட மனுக்கள் தள்ளுபடி ஆகின. போலீஸ்காரர் வெயிலுமுத்துக்கு மதுரை ஐகோர்ட் கிளை ஜாமின் வழங்கியது.

இதற்கிடையே, ஜெயராஜின் மனைவி செல்வராணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி மனுதாக்கல் செய்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் ஒரு சாட்சி மட்டுமே விசாரணை செய்ய வேண்டியுள்ளது. விரைந்து விசாரணை முடிந்துவிடும் என தெரிவித்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க கோரி மனுதாக்கல் செய்திருந்தோம். இதில் தொடர்ந்து கால அவகாசம் வாங்கி விசாரணையை இழுத்தடித்து வருகின்றனர். எனவே, வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என வாதிட்டார்.

இதைப் பதிவுசெய்த நீதிபதி, தந்தை-மகன் மரண வழக்கை 3 மாதத்திற்குள் விசாரணை செய்து முடிக்கவேண்டும் என உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com