மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை- சாலைகளில் தண்ணீர் தேங்கியால் பொதுமக்கள் சிரமம்| Rain

பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை- சாலைகளில் தண்ணீர் தேங்கியால் பொதுமக்கள் சிரமம்| Rain
Published on

மதுரை:

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வருகிறது. மதுரையில் கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.

பகல் நேரங்களில் அனல் காற்றில் இருந்து தப்பித்து கொள்ள பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக வருகிற 24-ந்தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதன்படி கடந்த இரண்டு நாட்களாக மதுரை புறநகர் பகுதிகளான சோழவந்தான், வாடிப்பட்டி, மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சோழவந்தான் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் பல ஏக்கரில் பயிடப்பட்டு இருந்த நெற்கதிர்கள், வாழை உள்ளிட்டவை சாய்ந்து சேதமடைந்தன. மேலும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் மதுரை மாநகர் பகுதியில் இன்று அதிகாலை திடீரென கனமழை பெய்தது. 4.30 மணிக்கு தொடங்கிய மழை காலை 6 மணி வரை நீடித்தது. பலத்த மழை காரணமாக பெரியார் பஸ் நிலையம், மீனாட்சி அம்மன் கோவில், பாண்டி பஜார், நேதாஜி ரோடு, காமராஜர் சாலை, சிம்மக்கல், தல்லாகுளம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. இதனால் பாத சாரிகள் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

கடந்த சில வாரங்களாக மதுரை மாநகரில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், இன்று அதிகாலை திடீரென பெய்த கன மழையால் குளுமையான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com