

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மதிய நேரங்களில் வெயிலின் உஷ்ணம் மேலும் அதிகரிப்பதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதன்படி நேற்று காலை முதல் வெயில் கொளுத்திய நிலையில் 97.7டிகிரி பதிவானது. அதன் தொடர்ச்சியாக இன்று காலை முதலே வெயில் கொளுத்தியது. மதிய நேரத்தில் கடும் உஷ்ணமாக இருந்தது. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் தலையை துணியால் மூடிய படியும் தொப்பிகள் அணிந்தபடியும் சாலைகளில் சென்றனர்.
சாலையில் வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் வெயில் உஷ்ணத்தில் இருந்து தப்பிக்க இளநீர், நுங்கு, தர்பூசணி, மோர், கம்மங்கூழ், வெள்ளரி பிஞ்சு மற்றும் செயற்கை குளிர்பானங்களையும் வாங்கி பருகினர். இதனால் இயற்கை மற்றும் செயற்கை குளிர்பான கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது.