Girish Chodnkar | தமிழக அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இடம்பெறுவது மகிழ்ச்சி -கிரிஷ் சோடங்கர்

தமிழக அமைச்சரவையில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடம்பெறுகின்றனர்.
Girish Chodnkar | தமிழக அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இடம்பெறுவது மகிழ்ச்சி -கிரிஷ் சோடங்கர்
Published on

தமிழகத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக இன்று காலை ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முந்தைய அறிவிப்புகளை தொடர்ந்து தமிழ் நாட்டில் கூட்டணி ஆட்சி அமைகிறது. அந்த வகையில் த.வெ.க. தலைமையிலான ஆட்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவர் அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான ராஜேஷ்குமார், பி. விஸ்வநாதன் ஆகியோரை த.வெ.க. அமைச்சரவையில் நியமிக்க காங்கிரஸ் தலைமை நேற்று (மே 20) ஒப்புதல் வழங்கியது. இவர்கள் இருவரும் அமைச்சர்களாக இன்று (மே 21) பொறுப்பேற்கவுள்ளனர். இதன்மூலம் தமிழக அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் இடம்பெறவுள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கிரிஷ் சோடங்கர் பேசியதாவது:

"தமிழக அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இடம்பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அமைச்சர்களாக ஒப்புதல் அளிக்கப்பட்ட இருவர் நாளை பதவியேற்கவுள்ளனர். அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தத் துறை ஒதுக்கினாலும் மகிழ்ச்சிதான். அதை முதல்வர் விஜய் முடிவு செய்வார். அதனை காங்கிரஸ் ஏற்கும்.

மக்கள் இந்த ஆட்சியை கொண்டாடுகின்றனர். இது சிறப்பான ஆட்சியாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கையின் மூலம் மக்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்" எனக் குறிப்பிட்டார்.

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறுவது அது வெறும் அரசியல் நிகழ்வு அல்ல, ஒரு உணர்வு என காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "மீண்டும் கதர் ஆடை அணிந்த காங்கிரஸ் அமைச்சர்கள் தமிழ்நாடு அமைச்சரவையில் அமர்கிறார்கள். அது வெறும் அரசியல் நிகழ்வு அல்ல. ஒரு உணர்வு. ஒரு வரலாற்று தருணம்.

காமராஜர் காலத்தின் அரசியல் மரபு, எளிமை, தேசிய சிந்தனை, தியாக அரசியல் மற்றும் கூட்டணி மரியாதை மீண்டும் தமிழ்நாட்டு ஆட்சியில் இடம் பெறும் தருணம் இது. கதர் ஆடை மீண்டும் அமைச்சரவை மேசையில் அமருவது, அது வெறும் ஆடை அல்ல, ஒரு அரசியல் பாரம்பரியம். ஒரு சிந்தனை. ஒரு தியாகத்தின் அடையாளம்.

தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பி. விஸ்வநாதன் ஆகியோர் விஜய் தலைமையிலான அரசில் அமைச்சர்களாக பொறுப்பேற்கிறார்கள் என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி. தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இந்தியாவின் நம்பிக்கை ராகுல் காந்தி முன்வைக்கும் மக்கள் நலன், சமூக நீதி, இணைப்பு, பரஸ்பர மரியாதை மற்றும் ஏழை எளிய மக்களை மையமாகக் கொண்ட ஆட்சிக் கண்ணோட்டத்தை செயல்படுத்தும் அரசாக இது அமையும் என்று நம்புகிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com