‘தாய்மையை நிரூபிக்க மரபணு பரிசோதனை தேவையில்லை’ - சென்னை உயர் நீதிமன்றம்

ஒரு வாரத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு, உடலுறுப்பு மாற்று அங்கீகார குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் என உத்தரவு.
‘தாய்மையை நிரூபிக்க மரபணு பரிசோதனை தேவையில்லை’ - சென்னை உயர் நீதிமன்றம்
Published on

மேற்குவங்க மாநிலம் ஹவுராவை சேர்ந்த ரோஹித்குமார், சென்னை பெருங்குடியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக தானம் வழங்க அவரது தாய் ரீட்டா முன்வந்தார்.

ஆனால், தாய் மகன் உறவை நிரூபிக்கவில்லை எனக்கூறி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசின் உடலுறுப்பு மாற்று அங்கீகார குழு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரீட்டா, அவரது மகன் ரோஹித்குமார் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில், “தாய் - மகன் உறவை நிரூபிக்கும் வகையில் ஆதார் அட்டை, குடும்ப புகைப்படம், நிரந்தர வருமான வரி கணக்கு அட்டை ஆகியவற்றை அளித்தும் அங்கீகார குழு ஒப்புதல் அளிக்கவில்லை. ரோஹித்குமார் நோய் முற்றிய நிலையில் இருப்பதால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி அளிக்க அங்கீகார குழுவுக்கு உத்தரவிட வேண்டும்” என வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் ரீட்டாவின் மகன் ரோஹித் என்பதில் திருப்தி அடைகிறேன். தாய்மையை நிரூபிக்க மரபணு சோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதனால், ஒரு வாரத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு, உடலுறுப்பு மாற்று அங்கீகார குழு ஒப்புதல் அளிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com