சென்னையில் வெப்பம் அதிகரிப்பதால் பாதிப்பு- பொதுமக்கள் அடிக்கடி தண்ணீர், மோர், உப்பு கரைசல் குடிக்க வேண்டும்

பயணத்தின் போது குடிநீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
சென்னையில் வெப்பம் அதிகரிப்பதால் பாதிப்பு- பொதுமக்கள் அடிக்கடி தண்ணீர், மோர், உப்பு கரைசல் குடிக்க வேண்டும்
Published on

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறையின் சார்பில் கோடை வெயிலின் பாதிப்புகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களுக்கு பின்வரும் பல்வேறு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும் போது உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிகதாகம், தலைவலி, உடல்சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

பச்சிளம் குழந்தைகள், சிறுவயது குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிகளவில் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

வெளியில் வேலை செய்யும் போது, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீர் பருக வேண்டும். சிறுநீரானது வெளிர்மஞ்சள் நிறத்தில் வெளியேறும் அளவில் தேவையான அளவு நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் பருகுவதைத் தவிர்க்கவும். அதிக அளவில் மோர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக்கஞ்சி, இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஓ.ஆர்.எஸ். உப்புக்கரைசல் ஆகியவற்றை பருக வேண்டும். வெளியே செல்லும் போது, திறந்தவெளியில் வேலை செய்யும் போது தலையில் பருத்திதுணி, துண்டு, தொப்பி அணிந்து கொள்ள வேண்டும். குடை பயன்படுத்துவதை கட்டாயமாக்கலாம். பயணத்தின் போது குடிநீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 200 நகர்ப்புர நலவாழ்வு மையங்கள், 16 நகர்ப்புற சமூக நல மையங்கள், 3 மகப்பேறு மருத்துவமனைகள், தொற்று நோய் மருத்துவமனை ஆகியவை வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்து சிகிச்சை வழங்குவதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு வெப்பம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்த மருந்துகளும், 1.34 லட்சம் ஓ.ஆர்.எஸ்.பாக்கெட்டுகளும் கையிருப்பில் உள்ளன.

வெயில் அதிகம் உள்ள நேரங்களில் பொதுமக்கள் சென்னை மாநகராட்சியில் உள்ள 57 வீடற்றோர் காப்பங்களில் தங்கி கொள்ளலாம்.

எனவே, அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், விழிப்புணர்வில் மாநகராட்சி தெரிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள், திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பய ணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com