3 மாதங்களாக வறண்டு கிடந்த கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் செல்ல தடை

சுற்றுலா பயணிகள் கூழாங்கல் ஆற்றில் இறங்கி குளிக்க முடியாததால் ஏமாற்றத்துடன் கரையில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
Kaviyaruvi
கவியருவி
Published on

ஆனைமலை அடுத்த ஆழியார் கவியருவி மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இந்த அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாமல் இருந்ததால் அருவி வறண்ட நிலையில் காணப்பட்டது. இதனால் அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

வெள்ளப்பெருக்கு

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சக்தி எஸ்டேட், கவர்கல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக ஆழியாறு-வால்பாறை சாலை உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆழியார் கவியருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்குள்ள தடுப்பு வேலிகள் உடைந்து காணப்படுகிறது. அதனை சீரமைத்த பின்னர், நீர்வரத்து குறைந்தவுடன் ஒரு சில நாட்களில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக நீரின்றி பாறையாக காட்சியளித்த அருவி தற்பொழுது மழைப்பொழிவு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சின்னக்கல்லாறில் 51 மி.மீ.மழை

வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கிய கனமழை இடைவிடாமல் பெய்து வருகிறது. இதனால் கருமலை ஆறு, சோலையாறு சுங்கம் ஆறு, வெள்ளமலை டனல் ஆறு, நடுமலை ஆறு, கூழாங்கல் ஆறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சோலையாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வால்பாறையில் 26 மி.மீ. மழையும், சின்னக்கல்லாறில் 51 மி.மீ.மழையும், நீராரில் 34 மி.மீ. மழையும், சோலையாறு அணையில் 32 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

பாதுகாப்பு

கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூழாங்கல் ஆற்றுப்பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகளை ஆற்றில் இறங்கி குளிக்க போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் வால்பாறை பகுதியில் கனமழை காரணமாக அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் எந்த ஒரு ஆற்றிலும் இறங்கி குளிக்க வேண்டாம் என்று போலீசார் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் கூழாங்கல் ஆற்றில் இறங்கி குளிக்க முடியாததால் ஏமாற்றத்துடன் கரையில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com