

ராமேசுவரம்:
தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலும் 61 நாட்கள் மீன்பிடி தடைகால சீசன் ஆகும். இந்த 2 மாத தடைகால சீசனில்தான் மீன்கள் அதிக அளவில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் சீசன் ஆகும். அதனால் தான் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவும் அரசால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் ராமேசுவரம் துறைமுக பகுதியில் 800 விசைப்படகுகள் நங்கூரமிட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே போல் பாம்பன், மண்டபம், தொண்டி, சோழியக்குடி, ஏர்வாடி, கீழக்கரை, மூக்கையூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் ஆங்காங்கே உள்ள துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், அதைசார்ந்த மீன் பிடி தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழந்து உள்ளனர்.
தடைகால சீசன் தொடங்கி உள்ளதை தொடர்ந்து ராமேசுவரத்தில் விசைப்படகுகளில் இருந்து மீன்பிடி வலை, மடி பலகை, ஐஸ் பாக்ஸ், சமையல் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து மீன்பிடி சாதனங்களையும் படகுகளில் இருந்து மீனவர்கள் வீடுகளுக்கு எடுத்து சென்று விடுவார்கள். தடைகால சீசன் தொடங்கியுள்ள போதிலும் நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகள் வழக்கம்போல் மீன்பிடிக்க செல்ல அனுமதி உண்டு. அதனால் நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் பிடித்து வரக்கூடிய அனைத்து வகை மீன்களும் இன்னும் சில நாட்களில் அதிக அளவில் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விசைப்படகுகளுக்கான 61 நாட்கள் மீன்பிடி தடைகால சீசன் தொடங்கியுள்ளதால் அனைத்து வகை மீன்களும் விலை உயரும் என்பதால் மீன் பிரியர்கள் திகைத்து உள்ளனர்.