கோட்டக்குப்பம் அருகே மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்- தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு

சுடுகாட்டை அப்புறப்படுத்த கோரி கடந்த 30 ஆண்டுகளாக நடுக்குப்பம் மீனவர்கள் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கிறோம் என கூறினர்.
கோட்டக்குப்பம் அருகே மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்- தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு
Published on

புதுவை அடுத்த தமிழக பகுதியான கோட்டகுப்பம் நகராட்சிக்குட்பட்ட நடுக்குப்பம் மீனவர்கள் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி கடலில் இறங்கி கருப்பு கொடி ஆர்பாட்டம் நடத்தினர்.

அப்போது நடுக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கடலில் இறங்கி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதை அறிந்த கோட்டகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் அம்பிகா சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கடலில் இறங்கி போராட்டம் நடத்திய மீனவர்களை சமாதானப்படுத்தினர். போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு இணங்க மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

இதுகுறித்து போராட்டம் நடத்திய மீனவர்கள் கூறுகையில், பெரியக்கோட்டக்குப்பம் பகுதியில் வாழும் ஆதிதிராவிடர் மக்களின் சுடுகாட்டுக்கும் கடலுக்கும் உள்ள இடைவெளி மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் கடல் அரிப்பின் போது சடலங்கள் வெளியே வருகிறது. மேலும் சடலங்களை மீன்கள் சாப்பிடுவதால் அதனை உணவாக சாப்பிடும் மனிதர்களுக்கு பலவிதமான நோய்கள் உருவாகிறது.

இந்த சுடுகாட்டில் புதைக்கப்படும் சடலங்களால் நடுக்குப்பம் மீனவர்களின் குடிநீரும் பாதிப்படைந்துள்ளது. இந்த சுடுகாட்டை அப்புறப்படுத்த கோரி கடந்த 30 ஆண்டுகளாக நடுக்குப்பம் மீனவர்கள் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கிறோம் என கூறினர்.

மேலும் நடுக்குப்பம் மீனவ கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பல்வேறு இடங்களில் பதாகைகளை வைத்துள்ளனர். இதுபோல பெரியகோட்டக்குப்பம் ஆதிதிராவிடர் மக்களும் சுடுகாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு அதிகாரிகள் அப்புறப்படுத்தாததால் தேர்தலை புறக்கணிப்பதாக பல்வேறு இடங்களில் பதாகைகள் வைத்துள்ளதால் கோட்டகுப்பம் நகராட்சி பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com