

தானியங்கி கதவுகள் உள்ளிட்ட மெட்ரோ ரெயில் வசதிகளுடன் கூடிய புறநகர் மின்சார இமு வகை ரெயில், சென்னை ஒருங்கிணைந்த ரெயில் பெட்டிகள் நிறுவனத்தில் முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ளது.
புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் இமு வகை மின்சார ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. அவை, குறுகிய தொலைவு மற்றும் தொலை தூர ரெயில்களாக தற்போது இயங்கிவருகின்றன.
அதன்படி, இமு வகை ரெயில்களில் 8 முதல் 12 பெட்டிகள் வரை இணைக்கப்பட்டிருக்கும். அவற்றில் கதவுகள் திறந்த வெளியாகவே இருக்கும்.
தற்போதைய இமு வகை புறநகர் மின்சார ரெயில்களில் பயணிப்போர் கூட்டமாக பெட்டிகளின் கதவோரங்களில் நின்றே பயணிக்கின்றனர்.
அப்போது சில நேரங்களில் அவர்கள் கீழே விழும் நிலை ஏற்பட்டு விபத்து நேரிடுகிறது. அத்துடன் கூட்டத்தில் உள்ளே நின்று பயணிக்கும் பயணிகளுக்கு தாங்கள் இறங்கும் ரெயில் நிலையம் வந்துவிட்டதா என அறிவதற்கான வசதியும் இல்லை. ஆகவே நிலையங்களைத் தவற விட்டு வேறு நிலையங்களில் பயணிகள் இறங்கும் சூழலும் உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) முதல் முறையாக தானியங்கி கதவுகளுடன் நிலைய தகவல்கள் உள்ளிட்டவற்றை பயணிகளுக்கு தெரிவிக்கும் மின்னணு திரைகளுடன் மெட்ரோ ரெயில்கள் வசதியுடன் கூடிய பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
புதிய குளிர்சாதனமற்ற மின்சார பல்பிரிவு ரெயில் (நான் ஏ.சி. இமு) எனப்படும் அந்த ரெயிலில் 12 பெட்டிகள் உள்ளன. அதில் 1,003 பயணிகள் ஒரே நேரத்தில் அமர்ந்து பயணிக்கலாம். அமர்ந்தவர்களைத் தவிர, நின்று பயணிப்பவர்களையும் சேர்த்து 4,695 பேர் பயணிக்கும் வகையில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. துருப்பிடிக்காத எக்கு, அலுமினியம் போன்ற சில உலோகத்தால் வடிவமைக்கப்பட்ட இமு ரெயிலில் பயணிகளுக்கான தகவல் வசதி மின்னணு திரைகளும் உள்ளன. அதில் ரெயில் நிற்கும் நிலையங்கள், அடுத்து வரும் நிலையங்கள் விவரங்களை அறியலாம்.
தானியங்கி கதவுகள் மூடப்படாவிட்டால் ரெயில் இயங்காது என்ற நிலையில் அவை வடிவமைக்கப்பட்டு உள்ளன. காற்றோட்டத்துக்கான ஜன்னல்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த ரெயில் வடக்கு ரெயில்வே மண்டலத்துக்காக தயாரிக்கப்பட்டு சில நாள்களுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எப். அதிகாரிகள் தெரிவித்தனர்.