

மண்ணச்சநல்லூர்:
சக்தி தலங்களில் முதன்மையானதும், பிரசித்தி பெற்றதுமான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
அதேபோல், அண்டை மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்து இரவு தங்கி காலையில் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது இந்த கோவிலில் பூச்சொரிதல் விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பக்தர்கள் வண்டிகளிலும், தலையில் பூக்கூடைகளை சுமந்தும் வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்று 4-வது வார பூச்சொரிதல் நிகழ்ச்சி நடக்கிறது. இந்தநிலையில் சமயபுரம் கோவிலுக்கு வந்து இரவில் தங்கி இருந்து காலையில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வதற்காக வருகை தந்த ஏராளமான பக்தர்கள் கோவில் சன்னதி வீதி மண்டபத்தில் படுத்து உறங்கினர்.
இதில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நதியா (வயது 32) மற்றும் அவரது உறவினர்கள் நேற்று இரவு சமயபுரம் கோவிலுக்கு வந்தனர். ஏராளமான பிரசாத ஸ்டால்கள், பூஜை பொருட்கள் விற்பனை கடைகள் அமைந்துள்ள பகுதியில் கடைகளை அடைத்த பின்னர், விரதம் மேற்கொள்ளும் அந்த பக்தர்களும் அதே மண்டபத்தில் படுத்திருந்தினர். இதற்கிடையே இன்று அதிகாலை சுமார் 12.45 மணியளவில் உறங்கிக் கொண்டிருந்த மூன்று பெண் பக்தர்கள் மீது கோவில் மண்டபத்தின் மேற்கூரை கான்கிரீட் சுவர் திடீரென்று மளமளவென்று இடிந்து விழுந்தது.
இதில் அந்த பகுதியில் படுத்திருந்த மூன்று பெண் பக்தர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு மற்ற பக்தர்களும் பெரிய அசம்பாவிதம் நடந்திருப்பதை அறிந்து அவர்களை நோக்கி ஓடிவந்தனர். இதனால் கோவில் வளாகமே பரபரப்பாக காணப்பட்டது. மேலும் கோவில் ஊழியர்கள், காவலாளிகளும் திரண்டனர்.
நள்ளிரவு நேரம் என்பதால் அதிகாரிகள் யாரும் அங்கு இல்லை. உடனடியாக இதுபற்றி காவலாளிகள் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே மேற்கூரை கான்கிரீட் இடிந்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்த நதியா என்ற பக்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறித்துடித்தனர்.
இதையடுத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மற்ற இரண்டு பெண் பக்தர்களையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான நதியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் நேரில் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக விபத்து நடந்த பகுதியில் படுத்திருந்த பக்தர்கள் அனைவரையும் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் பேரிக்கார்டுகளை கொண்டு சன்னதி வீதியை முற்றிலும் அடைத்தனர். அந்த பகுதிக்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்களின் நலனுக்காக சமயபுரம் மாரியம்மனே பச்சை பட்டினி விரதம் இருந்து வரும் நிலையில் அம்மனை வேண்டி வந்த பெண் பக்தர் ஒருவர் கோவில் வளாகத்திலேயே மேற்கூரை இடிந்து விழுந்து பலியானதால் சக பக்தர்கள் சோகத்தில் மூழ்கினர்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 6-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏழு நிலை ராஜகோபுரம் மற்றும் அம்மன் சன்னதிக்கு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தமிழகத்திலேயே அதிக வருவாய் ஈட்டக்கூடிய இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் விரைவில் சித்திரை திருவிழா தொடங்க உள்ளது.
நள்ளிரவில் விபத்து நடந்ததால் ஒருவர் பலி, 2 பேர் காயமடைந்துள்ளனர். இதுவே பகல் நேரங்களில் நடந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும் என்று பக்தர்கள் புலம்பியவாறு சென்றனர்.
கும்பாபிஷேகம் நடைபெற்று நான்கு ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில் பிரதான மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பக்தர் ஒருவர் பலியான சம்பவம் பக்தர்களிடமும், அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.