

நெல்லை மாவட்டம் களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் காட்டுப்பன்றி கடமான், கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றனர்.
விளைநிலங்களுக்குள் புகும் காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் பன்றிகளை சுடும் பணியில் வனத்துறையினர் சுணக்கம் காட்டி வருவதாகவும், இதனால் நாளுக்கு நாள் வனவிலங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுபோல வன விலங்குகள் நாசம் செய்யும் பயிர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படுவதில்லை என்றும் விவசாயிகள் புகார் கூறுகின்றனர். இதனை கண்டித்தும், வனவிலங்குகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த கோரியும் களக்காடு விவசாயிகள் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக களக்காடு விவசாயிகள் பாதுகாப்பு குழு தலைவர் தாவீது அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அப்பகுதியில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளது.