பேரிச்சை பழத்தில் யானை உருவம்: குன்னூரில் பழக்கண்காட்சி நாளை தொடங்குகிறது

டேலியா, டயான்தஸ், ஆஸ்டர் லூபின், உட்பட பல்வேறு மலர்கள் பூத்து குலுங்கி வருகிறது.
பேரிச்சை பழத்தில் யானை உருவம்: குன்னூரில் பழக்கண்காட்சி நாளை தொடங்குகிறது
Published on

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனையொட்டி ஏப்ரல், மே மாதங்களில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து காணப்படும்.

கோடை சீசனுக்கு வரும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி மற்றும் படகு அணிவகுப்பு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

நாளை தொடங்குகிறது

அந்தவகையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடப்பு ஆண்டுக்கான பழக்கண்காட்சியை நாளை முதல் 30-ந்தேதிவரை நடத்துவது என்று தோட்டக்கலைத்துறை முடிவுசெய்து உள்ளது.

ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி கடந்த 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடந்தது. அதன்பிறகு காட்டேரி பூங்காவில் மலைப்பயிர்கள் கண்காட்சி நடத்தப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 128-வது மலர் கண்காட்சி கடந்த 18-ந்தேதி தொடங்கி நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நாளை (27-ந்தேதி) தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சிக்கான பல்வேறு ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

பழக்கண்காட்சி

பழக்கண்காட்சியையொட்டி 30 வகைகளில் 130 ரகங்களில் 3 லட்சம் மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு, அந்த செடிகளில் தற்போது சால்வியா மேரி கோல்டு, காஸ்மாஸ், டேலியா, டயான்தஸ், ஆஸ்டர் லூபின், உட்பட பல்வேறு மலர்கள் பூத்து குலுங்கி வருகிறது.

அரியவகை மரங்களுக்கு அடியில் பூந்தொட்டிகளை கொண்டு அலங்கரிக்கும் பணிகளும் தீவிரமாக நடக்கிறது. இந்த கண்காட்சியில் 11 மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலை சார்பில் அரியவகை பழங்கள் மற்றும் உள்ளூர் பழத்தோட்ட விவசாயிகள் விளைவித்த பழங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

டைனோசர், யானை

மேலும் சிம்ஸ் பூங்கா பழக்கண்காட்சியில் பேரிச்சம்பழங்களால் யானை, உலர்பழங்களால் டைனோசர் பல்வேறு பல்வேறு உருவங்களின் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

பழங்களால் உருவான விலங்குகளின் உருவங்கள், அங்கு வரும் சுற்றுலா பயணிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளன. மேலும் அங்கு தயார் செய்யப்பட்டு உள்ள பல்வேறு வடிவமைப்புகளை காட்சிப்படுத்த தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கலெக்டர்

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறுகையில், "குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நாளை தொடங்கும் பழக்கண்காட்சி வருகிற 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக தோட்டக்கலைத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே சிம்ஸ் பூங்கா பழக்கண்காட்சியை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கண்டு களிக்க வேண்டும்" என்று தெரிவித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com