தேர்வு முடிவே வாழ்க்கையல்ல - மகனின் 10th மார்க்கை பகிர்ந்து வீடியோ வெளியிட்ட அறந்தாங்கி நிஷா

அதிக மதிப்பெண் எடுத்திருந்தால் அதைவிட இன்னும் சிறப்பாக வர முயற்சி செய்யுங்கள்.
தேர்வு முடிவே வாழ்க்கையல்ல - மகனின் 10th மார்க்கை பகிர்ந்து வீடியோ வெளியிட்ட அறந்தாங்கி நிஷா
Published on

தொலைக்காட்சி மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவிலும் கலக்கி வரும் அறந்தாங்கி நிஷா தனது கலகலப்பான பேச்சால் ரசிகர்களிடையே பிரபலமானவர். தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அறந்தாங்கி நிஷா தனது மகன் எடுத்துள்ள மதிப்பெண்கள் குறித்து வீடியோ வெளியிட்டு பேசியிருக்கிறார்.

அதில், தனது மகன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் தன்னம்பிக்கை தரும் விதமாக அவர் பேசி இருப்பது சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வீடியோவில், ஈரோட்டில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் படித்து வந்த தனது மகன் பத்தாம் வகுப்பு தேர்வில் 321 மதிப்பெண்கள் பெற்றிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், எல்லா பெற்றோர்களைப் போல நானும் ஒரு பயத்துடன்தான் இருந்தேன். என்ன முடிவு வரும் என்று காத்திருந்தேன். இப்போது என்னுடைய மகன் 321 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார். இந்த மதிப்பெண் எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது.

எந்த மதிப்பெண் கிடைத்தாலும் அது அடுத்த கட்டத்திற்கு போவதற்கான ஒரு படிக்கட்டு மட்டும்தான். இந்த ஒரு தேர்வே உங்கள் வாழ்க்கையை முடிவு செய்யும் என்று நினைக்க வேண்டாம். பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தால், பன்னிரண்டாம் வகுப்பில் இன்னும் அதிகமாக எடுக்க முயற்சி செய்யுங்கள். அதிக மதிப்பெண் எடுத்திருந்தால் அதைவிட இன்னும் சிறப்பாக வர முயற்சி செய்யுங்கள்.

மதிப்பெண் குறைந்துவிட்டதால் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று யாரும் நினைக்கக்கூடாது. வாழ்க்கையில் திறமை இருந்தால் அடுத்தடுத்த கட்டங்களுக்கு எளிதாக செல்ல முடியும். எந்த காரணத்திற்காகவும் மனம் உடையாதீர்கள். கவலைப்படாதீர்கள் என்று மாணவர்களுக்கு அவர் தைரியம் கொடுத்துள்ளார். அறந்தாங்கி நிஷாவின் இந்த பதிவு பலரையும் கவர்ந்திருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com