

என்ஜினீயரிங் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் அடுத்த மாதம் 1-ந்தேதி வெளியாகிறது.
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த 5-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. அந்த வகையில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 932 மாணவர்கள், 1 லட்சத்து 9 ஆயிரத்து 278 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் 10 பேர் என மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 220 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வருகிற 29-ந்தேதி வெளியாகும் என ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்த உத்தேச கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது தள்ளிப் போகலாம் என பேசப்பட்டு வந்தது.
அதன்படி, தற்போது தரவரிசைப் பட்டியல் எப்போது வெளியாகும்? என்பது குறித்த தகவலை உயர்கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.
இதுதொடர்பாக உயர்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது.-
சி.பி.எஸ்.இ. மறுமதிப்பீட்டு மதிப்பெண்கள் 21-ந்தேதியன்று வெளிவந்த நிலையில், 29-ந்தேதி வெளியிட இருந்த தரவரிசைப் பட்டியல் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி வெளியிடப்படும். மேலும் என்ஜினீயரிங் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகளும் அன்றைய தினம் அறிவிக்கப்படும். வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் குறைகள் இருந்தால், அவற்றை சரிசெய்வதற்கான குறைதீர்ப்பு காலம் அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை வழங்கப்படும். இந்த காலக்கட்டத்தில் மாணவர்கள் தங்களுக்குரிய குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள அருகில் உள்ள தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை (டி.எப்.சி.எஸ்) நேரில் அணுகலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.