பவானி அருகே பரிதாபம்- என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் காவிரி ஆற்றில் மூழ்கி பலி

ஈரோடு மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் வெயிலில் இருந்து தப்பிக்க வாலிபர்கள், சிறுவர்கள் நீர் நிலையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
பவானி அருகே பரிதாபம்- என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் காவிரி ஆற்றில் மூழ்கி பலி
Published on

ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா காடப்பநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (49) டெய்லர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கவின்ராஜ் (21) என்ற மகனும், பிரவீன் ராஜ் (18) என்ற மகனும் உள்ளனர்.

இதில் மூத்த மகன் கவின்ராஜ் பெருந்துறை மேட்டுக்கடை பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் ட்ரிபிள் இ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் கவின்ராஜ் தனது நண்பர்கள் கோகுல் சக்தி மனோஜ் ஆகியோருடன் காடப்பநல்லூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்து வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு நண்பர்களுடன் குளிக்க சென்றார்.

நண்பர்களுடன் உற்சாக மிகுதியில் கவின்ராஜ் குளித்து கொண்டிருந்தார். கவின்ராஜ் நீச்சல் அடித்துக் கொண்டு மறுக்கரைக்கு செல்வதாக கூறி நீச்சல் அடித்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கவின்ராஜ் நீரில் மூழ்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அலறினார்கள்.

இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்திற்கும் பவானி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பவானி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றில் மீனவர்களுடன் இணைந்து கவின்ராஜை தேடினர்.

பின்னர் சிறிது நேரத்தில் கவின்ராஜ் உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்கள் கண்ணெதிரே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஈரோடு மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் வெயிலில் இருந்து தப்பிக்க வாலிபர்கள், சிறுவர்கள் நீர் நிலையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அப்படி நீர்நிலைகளுக்கு செல்லும்போது இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலையை சந்திக்க நேரிடுகிறது. எனவே சிறுவர்கள் வாலிபர்கள் கவனத்துடன் இருக்க வேண்டுமென போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com