பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மோசடி - 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, ஆகிய முக்கிய நகரங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
 Enforcement Directorate
Published on

தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் செப்டம்பர் மாதம் போட்டித் தேர்வு நடைபெற்றது.

1.33 லட்சம் பேர் எழுதிய இத்தேர்வின் முடிவுகள், கடந்த 2017 நவம்பர் 7-ந்தேதி வெளியாகின. தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக, தேர்வு எழுதியவர்கள் புகார் செய்தனர்.

இதையடுத்து தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் உமா, சென்னை காவல்துறை மத்தியக் குற்றப் பிரிவில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில், அந்தத் தேர்வுக்குரிய விடைத்தாள் மற்றும் மதிப்பெண் பட்டியல் தயாரித்த டெல்லி நிறுவனம், தேர்வில் முறைகேடு செய்த 156 பேர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இம்முறைகேட்டில் தரகர்கள், டேட்டா எண்ட்ரி நிறுவனத்தை சேர்ந்தவர்கள், பள்ளி கல்வித்துறை ஊழியர்கள் உட்பட, 19 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சுரேஷ்பால், கணேசன், ஷேக் தாவூத் நாசர், ரகுபதி, சின்னசாமி, வினாயக மூர்த்தி உட்பட 9 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

இதில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்காக குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.35 லட்சம் வரை என 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்டதாக விசாரணையில் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக தெரிய வந்ததை அடுத்து தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, ஆகிய முக்கிய நகரங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

சோதனையின் முடிவில் சட்ட விரோத பண பரிமாற்றம் எவ்வளவு நடந்தது. அதை சொத்துக்களாக எங்கே குவித்து வைத்துள்ளனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com