பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்காமல் தூங்கிய ஊழியர் சஸ்பெண்டு

சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ பதிவை ரெயில்வே அதிகாரிகள் சி.சி.டி.வி. கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.
பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்காமல் தூங்கிய ஊழியர் சஸ்பெண்டு
Published on

சென்னை:

சென்னையில் மின்சார ரெயில் சேவை அதிகாலை 3.30 மணியில் இருந்து தொடங்குகிறது. 24 மணி நேரத்தில் 3 மணி நேரம் மட்டுமே ரெயில்கள் ஓய்வெடுக்கின்றன.

அதிகாலையில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை 4 வழித்தடங்களிலும் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் மக்களின் வாழ்க்கையோடு தினமும் பின்னிப் பிணைந்துள்ள மின்சார ரெயில் சேவை ஜீவநாடியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் அதிகாலை 3:30 மணிக்கு பயணம் செய்ய சென்ற பயணிகள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர். டிக்கெட் எடுக்க கூடிய கவுண்டரில் ஊழியர் தூங்கிக் கொண்டிருந்தார். அவரை ஒரு பயணி கண்ணாடியை தட்டி எழுப்பி உள்ளார். ஆனால் அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் என்ன பேசுவது என்று தெரியாமல் பயணியிடம் தகராறு செய்துள்ளார்.

அதிகாலை 3.36 மணிக்கு செல்லக்கூடிய மின்சார ரெயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்க வந்தபோது பொறுப்பில்லாமல் தூங்கிய ஊழியரை பயணி தட்டி எழுப்பியதால் அவர் கோபத்தில் திட்டியதோடு 3.30 மணிக்கு தான் பணி தொடங்கும் என்று கூறியுள்ளார்.

அப்போது அவர் தான் 2-வது பிளாட்பாரத்திற்கு செல்ல வேண்டும் ரெயில் புறப்படக்கூடிய நேரம் நெருங்கிவிட்டது என்று கூறியுள்ளார். அதற்கு ஊழியர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு விருப்பமுள்ள இடத்தில் புகார் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை தனது செல்போனில் பதிவு செய்த பயணி அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அது வைரலாகி ரெயில்வே ஊழியரின் சஸ்பெண்ட் உத்தரவுக்கு வழி வகுத்துள்ளது. சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ பதிவை ரெயில்வே அதிகாரிகள் சி.சி.டி.வி. கேமரா மூலம் ஆய்வு செய்தனர். பணி நேரத்தில் தூங்கிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. சம்பவம் 20-ந்தேதி நடந்துள்ள நிலையில் 2 நாட்களுக்குப் பிறகு அவை வெளியாகி சம்பந்தப்பட்ட ஊழியர் மீது ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் வழங்கும் ஊழியர் தயார் நிலையில் இருக்க வேண்டும். பணி நேரத்தில் தூங்குவது தவறு என்றும் அதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தனர்.

பட்டாபிராமை சேர்ந்த சமூக ஆர்வலர் சடகோபன் கூறும் போது, ரெயில் ஒன் செயலியின் மூலம் முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெரும் வசதி மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை சரியாக விளம்பரம் செய்யவில்லை. ரெயில் நிலையங்களில் இன்னும் யூ.டி.எஸ். செயலி மூலம் டிக்கெட் பெறலாம் என்று அறிவிப்புகள் உள்ளன. அதனால் மக்கள் குழப்பம் அடைகிறார்கள் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com