

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பந்தலூர் தாலுகா குந்தலாடியை அடுத்துள்ளது புத்தூர் வயல் கிராமம். வனப்பகுதியை ஒட்டிய கிராமம் என்பதால் இங்கு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அவ்வப்போது காணப்படும்.
இந்த நிலையில் நேற்று புத்தூர்வயலைச் சேர்ந்த சிறுவன் யானை தாக்கி பலியான சம்பவம் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. புத்தூர் வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகன் மிஸ்ஹாப் (வயது 14).
இவர் அந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது தேர்ச்சி பெற்று 9-ம் வகுப்பு செல்ல உள்ளார்.
நேற்று மாலை புத்தூர்வயலில் இருந்து பாக்கனா என்ற இடத்துக்கு மிஸ்ஹாப் முடிவெட்டுவதற்காக சென்றார். அங்கு முடிவெட்டி விட்டு மாலை 6.45 மணி அளவில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென சாலைக்கு வந்த ஒரு காட்டு யானை, சிறுவன் மிஸ்ஹாப்பை தாக்கியது. இதனால் மிஸ்ஹாப் சத்தம் போட்டு அலறினான். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். கூட்டத்தை பார்த்து யானை மீண்டும் காட்டுக்குள் ஓடி மறைந்து கொண்டது.
யானை தாக்கியதில் மிஸ்ஹாப் பலத்த காயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு சுல்தான்பத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மிஸ்ஹாப்பை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை கேட்டு தாயாரும், உறவினர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மிஸ்ஹாப்பின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பணிக்காக துபாய் சென்றுள்ளார். இந்தநிலையில் அவரது மகன் யானை தாக்கி பலியான சம்பவம் கிராம மக்களையும், குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், வனவிலங்குகள் தாக்குதலில் இருந்து பொதுமக்களை காக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பிதிர்காடு அருகே முக்கட்டி என்ற இடத்தில் பொதுமக்கள் திரண்டு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
நெலாக்கோட்டை போலீசாரும், வனத்துறையினரும் அங்கு வந்து பொதுமக்களுடன் சமரசப்பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.