சென்ட்ரல், எழும்பூர் உள்பட 21 ரெயில் நிலையங்களில் மின்சார வாகன பேட்டரி மாற்றும் வசதி அறிமுகம்

பேட்டரி மாற்றும் முறையானது, மின்சாரம் தீர்ந்த பேட்டரிகளை மிகக் குறுகிய காலத்திற்குள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளாக மாற்றிக்கொள்ள பயனர்களுக்கு வழிவகை செய்கிறது.
சென்ட்ரல், எழும்பூர் உள்பட 21 ரெயில் நிலையங்களில் மின்சார வாகன பேட்டரி மாற்றும் வசதி அறிமுகம்
Published on

தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம், நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், சென்னை முழுவதும் உள்ள முக்கிய புறநகர் ரெயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் நிலையங்களை அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.

மத்திய அரசு மற்றும் ரெயில்வே வாரியத்தின் பசுமைப் போக்குவரத்து கொள்கையின்படி, கார்பன் உமிழ்வைக் குறைக்கவும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயணிகளின் வருகை மற்றும் மின்சார வாகன உள்கட்டமைப்பிற்கான தேவையைக் கருத்தில் கொண்டு சென்னை சென்ட்ரல், அண்ணனூர், பசுமை வழிச்சாலை, கொரட்டூர், கோட்டூர்புரம், சிந்தாதிரிப்பேட்டை, முண்டகக்கண்ணி அம்மன் கோவில், கோடம்பாக்கம், மந்தைவெளி, எழும்பூர், திருவல்லிக்கேணி, திருமயிலை, பெருங்குடி, பல்லாவரம், சைதாப்பேட்டை, பரங்கிமலை, தரமணி, திருவான்மியூர், வேளச்சேரி, வில்லிவாக்கம் மற்றும் வண்ணாரப்பேட்டை ஆகிய முக்கிய புறநகர் ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பேட்டரி மாற்றும் முறையானது, மின்சாரம் தீர்ந்த பேட்டரிகளை மிகக் குறுகிய காலத்திற்குள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளாக மாற்றிக்கொள்ள பயனர்களுக்கு வழிவகை செய்கிறது.

இதன் மூலம் வழக்கமான மின்சார வாகன சார்ஜிங் முறைகளில் ஏற்படும் காத்திருப்பு நேரம் தவிர்க்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட சார்ஜ் பாயிண்ட் ஆபரேட்டர்களின் மொபைல் செயலிகள் மூலம் இந்த வசதியை எளிதாகப் பயன்படுத்த முடியும்.

ஒப்பந்தத்தின்படி, உரிமம் பெற்ற நிறுவனங்களே இந்த வசதிகளை நிறுவி, இயக்கி, பராமரிக்கும் பொறுப்பை ஏற்கும்; ரெயில்வே நிர்வாகம் நிலைய வளாகத்திற்குள் அதற்கான இடத்தை வழங்கும். இந்த அமைப்பு மிகக் குறைந்த இடத்தையே எடுத்துக்கொள்வதால், பயணிகளின் நடமாட்டத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாது. லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கும் சென்னை கோட்டத்தின் புறநகர் ரெயில் நிலையங்களில் அமைக்கப்படும் இந்த வசதி, மின்சார வாகனங்களைப் பயன்படுத்தும் பொது மக்கள், மாணவர்கள் மற்றும் விநியோகப் பணியாளர்களுக்குப் பயனுள்ளதாக அமைவதோடு, கடைசி மைல் வரையிலான இணைப்பை மேம்படுத்தவும் உதவும். நவீன மற்றும் பசுமைப் போக்குவரத்தை ஊக்குவிப்பதில் சென்னை கோட்டத்தின் அர்ப்பணிப்பை இந்த முயற்சி உறுதிப்படுத்துகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com