

போதைப்பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியான நிலையில் அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கக்கோரி தமிழ்நாடு முழுவதும் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
சென்னை எழும்பூரில் போராட்டத்திற்கு காலையில் போலீசார் அனுமதி மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. தடையை மீறி எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் அரசுக்கு எதிராக முழக்கமிட்டதால் போலீசார் கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, கழகத்தினரை அராஜகமாக கைது செய்திருக்கிறது தவெக அரசு.
தங்களை தாங்களே ஜனநாயகசக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது.
கைது செய்யப்பட்ட திமுகவினரை உடனடியாக விடுதலை செய்வதோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.