TN Assembly Election| சென்னை மாவட்டத்தில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி நாளை தொடக்கம்

மாற்றியமைக்கப்பட்ட வடிவமைப்பில் வாக்காளரின் வரிசை எண் மற்றும் பகுதி எண் ஆகியவை சீட்டின் மேல் வலது மூலையில் பெரிய எழுத்துருவில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
TN Assembly Election| சென்னை மாவட்டத்தில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி நாளை தொடக்கம்
Published on

சென்னை:

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் 13,95,716 ஆண் வாக்காளர்கள், 14,96,921 பெண் வாக்காளர்கள், 868 இதர வாக்காளர்கள் என மொத்தம் 28,93,505 வாக்காளர்கள் உள்ளனர். 975 இடங்களில் மொத்தம் 4,085 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 18-ந்தேதி வரை வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) அந்தந்தப் பகுதிகளின் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.) மூலமாக வினியோகம் செய்யப்பட உள்ளது.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்காளர் தகவல் சீட்டு வினியோகத்திற்கான அட்டவணையை தயாரித்து, அதன் அடிப்படையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கும் ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டினை வழங்கி கையெழுத்து அல்லது விரல் அடையாளத்தை பெற தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினியோகிக்கப்படாத வாக்காளர் தகவல் சீட்டு அனைத்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திருப்பி வழங்கிடவும், அவை மூடும் உறையில் பாதுகாப்பாக வைத்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, வாக்காளர்களின் வசதியை அதிகரிக்கும் நோக்கில், வாக்காளர் தகவல் சீட்டு வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட வடிவமைப்பில் வாக்காளரின் வரிசை எண் மற்றும் பகுதி எண் ஆகியவை சீட்டின் மேல் வலது மூலையில் பெரிய எழுத்துருவில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த மாற்றம் மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடியை எளிதில் அடையாளம் காணவும், வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்காளர் பெயரை வாக்காளர் பட்டியலில் விரைவாக கண்டறியவும் உதவியாக இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com