

கோவை மாவட்ட ஆவின் நிர்வாகம், மாதாந்திர பால் அட்டை வைத்துள்ள நுகர்வோருக்கு வழங்கி வந்த சிறப்புச் சலுகையை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு பால் லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த 2 ரூபாய் தள்ளுபடி சலுகை இனி இல்லை என கோவை ஆவின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாளை மறுநாள் (ஜூலை.1) முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதன்மூலம் மாதாந்திர பால் அட்டை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கும் இனி சில்லறை விற்பனை விலையிலேயே பால் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்கள் பிரதி மாதம் 11-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிக்குள் ஆவின் பிரத்யேக மொபைல் செயலி வழியாக ஆன்லைனில் பணம் செலுத்தி, தங்களது மாதாந்திர பால் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவினின் இந்த அறிவிப்பு நுகர்வோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவினின் உற்பத்தி மாநிலம் முழுவதும் 30% குறைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஏப்ரல் மாதத்தில் சுமார் 16 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் நிறுவனத்தின் தினசரி விநியோகம், தற்போது 13.5 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளது. கொள்முதல் குறைவால், விநியோகம் குறைந்ததாக ஆவின் தரப்பில் கூறப்படுகிறது. இதன்மூலம் நிறுவனம் ரூ.600 கோடி இழப்பை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
2021-ல் 40-45 லட்சம் லிட்டராக இருந்த தினசரி பால் கொள்முதல், தற்போது சுமார் 28 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளதால், தேவைக்கும், விநியோகத்திற்குமான இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது.