

கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழக-கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள ஜூஜூவாடி சோதனைச் சாவடியில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிகாலை திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் சோதனையைத் தொடங்கினர். மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த நடவடிக்கை காலை 8.30 மணி வரை நடைபெற்றது.
சோதனையின்போது, சோதனைச் சாவடியில் பணியில் இருந்த அதிகாரிகளிடமிருந்து கணக்கில் வராத ரூ.3.40 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தப் பணம் எவ்வாறு வந்தது, அதற்கான ஆதார ஆவணங்கள் உள்ளனவா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்ந்து கிடைத்து வந்த புகார்களின் அடிப்படையிலேயே இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதனையின்போது, மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் அவரது உதவியாளர் ராஜேஷ் ஆகியோர் பணியில் இருந்தனர். அவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தமிழ்நாடு–கர்நாடக மாநில எல்லையில் முக்கிய சோதனைச் சாவடியாக செயல்பட்டு வரும் ஜூஜூவாடி ஆர்டிஓ சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய இந்த அதிரடி நடவடிக்கை, ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின் முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.