

சென்னை கமலாலயத்தில் சரத்குமார், செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக தேர்தல் களம், மக்கள் பிரச்சனைகளை கூறுவதற்கு பதிலாக ஒருவரை மற்றொருவர், சாடும் வகையிலேயே அமைந்திருக்கிறது. எதையும் அரசியலாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
சுமார் 10.70 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழகத்திற்கு கடன் உள்ளது. அதை சமாளிக்கவோ, அல்லது குறைக்கவோ இந்த அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மத்திய அரசை மட்டும் கண்டிக்கும் திமுக அரசு, மக்கள் வளர்ச்சி திட்டத்திற்காக, மத்திய அரசு கொடுத்த நிதிகளை அரசு மக்களின் வளர்ச்சி பாதைக்காக பயன்படுத்தியதா என்பதை குறித்து வெள்ளை அறிக்கை கொடுக்க தயாரா?.
சமூக வளர்ச்சியை பற்றியும், அனைவரும் சமம் என்று வேஷம் போடும் திமுக அரசு, தனது கட்சியில் இருக்கும் வேறு சமுதாயத்தை சேர்ந்தவரை முதலமைச்சர் ஆக நியமனம் செய்யுமா?.
தமிழகத்தில், கல்விக்கு முதலிடம் என்ற பெயர் போய் போதை கலாச்சாரத்திற்கு முதலிடம் என கூறும் அவலம் ஏற்பட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, 2021-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, TASMAC காரணமாகத்தான் தமிழகத்தில் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், அதற்கு ஊதிய தரவுகள் உள்ளதாகவும் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்தால் TASMAC- ஐ ஒழிப்பதுதான் முதல் கையெழுத்தாக இருக்கும் என்று உறுதி அளித்தார். இந்த ஐந்து ஆண்டுகளில், அதைத்தவிர, அரசுக்கு வேறு வருமானம் இல்லை என்ற காரணத்தினால் அதை நிறைவேற்றாமல் இருக்கிறது. வேறு எந்த ஆதாரத்தின் மூலம், அரசுக்கு வருமானம் ஈட்ட முடியும் என்பது தெரியாமல், முழிக்கிறது.
மொழி என்பது, ஒருவருக்கொருவர் கருத்து பகிர்ந்து கொள்வதற்காக தான் தேவைப்படுகிறது. இதை தான் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, தெளிவுபடுத்துகிறது. அதை மக்களிடம் புரிய வைக்காமல், ஆளும் கட்சி இதை வைத்து அரசியல் செய்கிறது.
தமிழ் மொழியையும், தமிழ் பெருமையை பற்றியும் மார்தட்டிக் கொள்ளும் அரசு, ஏன் தனது திட்டங்களுக்கு மட்டும் ஆங்கில பெயர் வைத்துள்ளது.
இவ்வாறு சரத்குமார் பேசினார்.
மேலும், த.வெ.க. குறித்த கேள்விகளுக்கு "அடுத்தவர்களின் மேல் குற்றம் சுமத்திதான் விஜய் அரசியல் செய்கிறார். மத்திய அமைச்சர், எல். முருகன் மற்றும் பாஜக-தான் ஜனநாயகன் படத்தை, தடை செய்ய Censor Board உடன் இணைந்து செயல்பட்டு வருவதாக ஆதவ் அர்ஜுனா விமர்சனம் செய்துள்ளார். அனைத்து விஷயங்களையும், அரசியல் ஆக்கும் பழக்கம், அக்கட்சிக்கு உள்ளது. அதைத்தான் பழகி உள்ளார்" என்றார்.