பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 5-ந் தேதி வரை நீட்டிப்பு- உயர்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

விண்ணப்ப பதிவு செய்த மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை 6-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். ரேண்டம் எண் 10-ந் தேதி இணையத்தில் வெளியிடப்படும்.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்  5-ந் தேதி வரை  நீட்டிப்பு- உயர்கல்வித்துறை அமைச்சர் பேட்டி
Published on

சென்னை கல்லூரி கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் பொறியியல், கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இதுவரையில் 2 லட்சத்து 24 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு வருகிற 5 மற்றும் 6-ந்தேதி வரை நடைபெறும். பொது கலந்தாய்வு 8-ந்தேதி அந்தந்த கல்லூரிகளில் நடைபெறும்.

மாணவர்களின் நலன் கருதி விண்ணப்ப பதிவு செய்ய தவறிய மாணவர்களுக்காக 2 நாட்கள் இடைவெளியில் இணைய தளம் வழியாக இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு உதவ உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

2 மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் 15-ந்தேதி தொடங்குகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 1-ந் தேதி வகுப்புகள் தொடங்கப்படும்.

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு இதுவரையில் 2 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இதில் 2 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். விண்ணப்பம் பதிவு செய்ய கொடுக்கப்பட்ட கால அவகாசம் 5-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்ப பதிவு செய்த மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை 6-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். ரேண்டம் எண் 10-ந் தேதி இணையத்தில் வெளியிடப்படும்.

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி முதற்கட்டமாக இன்று தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறும். அவர்களுக்கான கால அட்டவணை விபரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 55 அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு, நேரடி 2-ம் ஆண்டு மற்றும் பகுதிநேர பட்டய படிப்பிற்கு விண்ணப்பிக்கவும், சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யவும் இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளியில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய அரசினுடைய லட்சியம். குறிப்பாக பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடம் கிடைக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.

பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தேதி 29-ந்தேதி அறிவிக்கப்படும். துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் முடிவு எடுப்பார். இந்த அரசு மாநில உரிமைகளை எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது உயர்கல்வித்துறை செயலாளர் அருண் ராய், கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, தொழில்நுட்ப கல்வி ஆணையர் விசாகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com