

தமிழ்நாட்டில் தினசரி மின்சார தேவை சுமார் 16 ஆயிரம் மெகாவாட் ஆகும். கோடை காலங்களில் மின் விசிறி, ஏ.சி., பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் இப்போது 20 ஆயிரம் மெகாவாட் வரை மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மே 2-ந்தேதி அதிகபட்சமாக 20,830 மெகாவாட் மின்சாரம் பயன்பாட்டில் இருந்தது.
இப்போது கோடை காலம் துவங்கிவிட்டதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக 20,060 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கத்திரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திர காலம் மே 4-ந்தேதி தொடங்க உள்ளது. அந்த கால கட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக வரும் நாட்களில் தினசரி மின்சார பயன்பாடு 22 ஆயிரம் மெகாவாட் வரை உயரும் என தெரிகிறது. தற்போது தமிழக மின்வாரியத்தின் கீழ் இயங்கும் அனல் மின்நிலையங்கள் மூலம் தினசரி 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தினசரி 6,000 மெகாவாட், சூரிய மின்சக்தி மூலம் 6,000 மெகாவாட், நீண்டகால கொள்முதல் திட்டத்தின் கீழ் 2,000 மெகாவாட், நடுத்தரகால கொள்முதல் மூலம் 2,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. மீதமுள்ள 2,000 மெகாவாட் மின்சாரம் குறுகியகாலமின் கொள்முதல் மற்றும் மின்சார பரிமாற்ற திட்டங்களின் கீழ் அடுத்த 3 மாதங்களுக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் பிற மாநிலங்களிடமிருந்து பெறப்படுகிறது. இதற்கிடையில், நீர், எரிவாயு மற்றும் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் உச்சநேரங்களில் (மாலை 6 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) பயன்படுத்தப்படுகிறது.
எனவே, பொதுமக்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அடுத்த 3 மாதங்களுக்கு தினசரி 22,000 மெகாவாட் மின்சாரம் விநியோகிப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. தடை இல்லாமல் மின்விநியோகம் செய்யத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.