

விழுப்புரம் நகரமன்ற கூட்டம் நேற்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையர் ஷியாமளா தேவி, நகரநல அலுவலர் ஸ்ரீபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகரமன்ற கவுன்சிலர்கள் மணவாளன், புருஷோத்தமன், நந்தாநெடுஞ்செழியன், சாந்தராஜ், வக்கீல் ராதிகாசெந்தில், கோதண்டராமன், இளந்திரையன், ரியாஸ்அகமது, சுரேஷ்ராம், இம்ரான்கான் உள்ளிட்டவர்கள், கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-
கீழ்பெரும்பாக்கம் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு உடனே தீர்வு காண வேண்டும். விழுப்புரம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள சர்வீஸ் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அங்கு மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். மகாராஜபுரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள எரிவாயு தகன மேடையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் கலையரங்கம் அமைக்க வேண்டும். பழைய நகராட்சி அலுவலகத்தில் டவுன்ஹால் பணியை விரைந்து முடிக்க வேண்டும். சாலாமேடு அண்ணாநகர், பொன்னேரி பகுதியில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் குடோனில் 6 மாதமாக தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.
திருப்பாச்சானூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சாலாமேடு பகுதி முழுவதும் குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ராகவன்பேட்டை பகுதியில் தெரு மின் விளக்குகள் பொருத்த வேண்டும்.
எருமனந்தாங்கல் ஏரியில் கழிவுநீர் நிரம்பி அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் நகரில் சரியாக குப்பைகள் அள்ளுவது கிடையாது. மருதூர் ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவதால் ஏரி நீர் மாசடைந்துள்ளது. பாதாள சாக்கடை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். நகராட்சியில் 200 சாலைகளுக்கு டெண்டர் விடப்பட்டும் அதனை விரைந்து போடாமல் சாலைப்பணிகள் கிடப்பில் உள்ளது.
வாரந்தோறும் நகரமன்ற கூட்டம் நடத்தாமல் 4 மாதத்திற்கு ஒருமுறைதான் நடத்துகின்றனர். இந்த 46 ஆண்டுகளில் 13 கூட்டங்கள்தான் நடந்துள்ளது. நகரமன்ற கவுன்சிலர்கள் தெரிவிக்கும் குறைகள், கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் செவிசாய்ப்பதில்லை.
ஒவ்வொரு வார்டிலும் 25 சதவீத பணிகள்கூட நடக்கவில்லை. 4 நகராட்சி ஆணையர்கள் மாறிவிட்டனர். ஆனால் மக்கள் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. நகரில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. சாலை வசதி, குடிநீர் வசதியை நிறைவேற்றுங்கள். பாதாள சாக்கடை பிரச்சனையை சரிசெய்து தூய்மையான நகரமாக மாற்றுங்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதற்கு பதிலளித்து நகரமன்ற தலைவர் பேசுகையில், பாதாள சாக்கடை பிரச்சனை தொடர்பாக வரக்கூடிய புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது. அதுபோல் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றார்.