

பருவமழையின் போது வேளச்சேரியில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டால் அரசு அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாரணயனன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் பிரசாந்த் கார்கவா ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறித்து விரிவான விவரங்களை தாக்கல் செய்ய அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
அதற்கு 2020-ல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் இதுவரை வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எந்த முன்னேற்றமும் இல்லை என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும், ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளை நெடுஞ்சாலைத்துறை, வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற குடியிருப்பு வாரியம் போன்ற அரசு சார்ந்த துறைகள்தான் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளன.
அரசுதான் மாறி உள்ளது, அரசு அதிகாரிகள் மாறவில்லையே. ஏரிகளை மீட்கும் நடவடிக்கையில் புதிய அரசு ஈடுபட்டு வரலாற்றில் இடம் பிடிக்கலாமே? மாமன்னர் அசோகருக்கு பின் ஏரியை யாரும் உருவாக்கவில்லை.
பருவமழையின் போது வேளச்சேரியில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டால் அரசு அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஏரியை மீட்டெடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து ஜூலை 28-ந்தேதிக்குள் தமிழ்நாடு நீர்வளத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.