முதலமைச்சர் விஜய் தலைமையில் மாநாடு - ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்பு

மதியம் 2.30 மணி முதல் 3.30 மணி வரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
CM Vijay
Published on

முதலமைச்சர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டை தொடங்கி வைத்திருந்தார்.

துரிதமாக நடவடிக்கை

அப்போது தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு, வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும், யாருடைய தலையீடும் இருக்காது என்றும் அதிகாரிகளிடம் தெளிவுபடுத்தினார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு உயர்வானவர்களாக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டப்படி துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

எந்த ஒரு சம்பவமும் நடப்பதற்கு முன்னதாகவே மூல காரணத்தை கண்டறிந்து குற்றச் சம்பவங்களை தடுக்க வேண்டும் என்றும் இதற்கு உளவுப்பிரிவு போலீசார் அனைத்து தகவல்களையும் சேகரித்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதே போல் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி இருந்தார்.

2-ம் நாள் மாநாடு

இதைத் தொடர்ந்து இன்று 2-ம் நாள் மாநாடு நடந்தது. தலைமைச் செயலகத்தில் உள்ள 10-வது மாடி கூட்டரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் காலையில் போலீஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் விரிவாக ஆய்வு நடத்தினார்.

இதில் போலீஸ் டி.ஜி.பி. மகேஷ் அகர்வால், கூடுதல் டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், உளவுப்பிரிவு அதிகாரிகள், போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இவர்களிடம் முதலமைச்சர் விஜய் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வாறு கையாளப்பட்டு வருகிறது என்பது பற்றி கருத்து கேட்டார். அதற்கு ஒவ்வொரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் தங்கள் மாவட்டத்தில் நிலவும் பிரச்சனைகளை கையாண்ட விதம் குறித்து விளக்கி கூறினார்கள்.

விரைவான நடவடிக்கை

போதைப் பொருளை ஒழிக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர்.

அப்போது முதலமைச்சர் விஜய் பேசும்போது, குற்றங்களை தடுக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மக்கள் லஞ்ச லாவண்யமற்ற, நேர்மையான ஒரு சமூக நீதிக்கான அரசாக இந்த அரசை தேர்ந்தெடுத்து உள்ளார்கள்.

சுதந்திரமாக முடிவு எடுங்கள்

எனே சட்டம்-ஒழுங்கு பிரச்சனையில் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம். இதில் நிரபராதிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. அதற்கேற்ப உங்களது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கோவில் திருவிழாக்கள், அரசியல் பேரணிகள் மற்றும் பொது நிகழ்வுகளின்போது நெரிசல் சம்பவங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

ரோந்து பணி

போதைப் பொருள் நடமாட்டத்தை கண்டறிந்து அதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறா வண்ணம் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சிங்கப்பெண் அதிரடிப்படையின் செயல்பாடு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பை பெற்று உள்ளது என்பதையும் முதலமைச்சர் விஜய் கேட்டறிந்தார்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுப்பது, பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக தன்னார்வலர்கள், சங்கங்கள் போன்ற அமைப்புகளை ஒருங்கிணைப்பது பற்றி விரிவாக ஆலோசனை வழங்கினார்.

கலெக்டர்களுக்கு அவார்டு

இதைத் தொடர்ந்து இன்று மதியம் மாவட்ட கலெக்டர்கள், வனத்துறை அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெற்றது.

அதில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தங்கள் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விரிவாக பேசினார்கள்.

கூட்டத்தின் நிறைவிலும் முதலமைச்சர் விஜய் உரையாற்ற உள்ளார். அப்போது திறமையாக செயல்பட்ட மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளை பாராட்டி பரிசு கேடயங்களை வழங்க உள்ளார். அத்துடன் மாநாடு நிறைவு பெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com