வணிக சிலிண்டர் விலை உயர்வு - ஓட்டல் தொழிலுக்கு மேலும் நெருக்கடி

காய்கறி விலைகளும் கடந்த 2 வாரமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஓட்டல்களை நடத்த முடியாத அளவுக்கு தள்ளப்பட்டு வருகிறோம்.
வணிக சிலிண்டர் விலை உயர்வு - ஓட்டல் தொழிலுக்கு மேலும் நெருக்கடி
Published on

அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக கடந்த 2 மாதமாக வணிக சிலிண்டர் வினியோகத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மிகக் குறைந்த அளவிலேயே ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்து தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கும் சிலிண்டர்கள் வழங்கப்படுவதால் சிறிய சிறிய ஓட்டல்கள், டீக்கடைகள் மூடப்பட்டுவிட்டன.

ஒரு சில ஓட்டல்கள் விறகு அடுப்புகளுக்கு , எலக்ட்ரிக் அடுப்புகளுக்கும் மாறி விட்டன, 50 சதவீதம் சிலிண்டர் பயன்பாடும் , 50 சதவீதம் எலக்ட்ரிக் மற்றும் விறகு அடுப்புகளுக்கும் மாறி விட்டதால் ஓட்டல்களில் உணவு பொருட்கள் பாதிப்பு இல்லாமல் கிடைக்கிறது.

ஆனால் ஓட்டல் உணவுப் பொருட்கள் விலை 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு விட்டது. டீ, காபி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் உயர்த்தப்பட்ட நிலையில் இன்று வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளித்து உள்ளது. வணிக சிலிண்டர் கிடைக்காமல் இடைத்தரகர்கள் மற்றும் ஏஜென்சிகள் மூலம் அதிக விலை கொடுத்து பெற்று வந்த நிலையில் தற்போது விலை உயர்த்தப்பட்டு இருப்பது ஓட்டல் உரிமையாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

வணிக சிலிண்டர்களை புரோக்கர்கள் ரூ.6 ஆயிரம் வரை விற்பனை செய்து கொள்ளை லாபம் ஈட்டி வருகிறார்கள். அதிக விலை கொடுத்து தொழில் செய்ய முடியாமல் நிறைய சிறு சாலையோர கடைகள், மூடப்பட்டு விட்டன.

தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் சிலிண்டர் விலை உயர்வு மேலும் ஓட்டல் தொழிலை நசுக்குவதாக அமைந்துள்ளது என்று உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு ஓட்டல் நிர்வாகத்தின் நிர்வாகி கூறியதாவது:-

ஏற்கனவே வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் கடுமையான சிரமங்களை சந்தித்து வருகின்றோம். ராக்கெட் அடுப்புகளில் விறகுகளை பயன்படுத்தி சமையல் செய்கிறோம். மேலும் எலக்ட்ரிக் தோசைக்கல் வாங்கி பயன்படுத்துவதன் மூலம் ஓரளவுக்கு வாடிக்கையாளர்களை சமாளிக்க முடிகிறது. 50 சதவீதம் மட்டுமே கியாஸ் பயன்படுத்துகிறோம்.

தற்போது சிலிண்டர் விலை உயர்ந்திருப்பதன் மூலம் இத்தொழில் பாதிக்கக்கூடும். ஏற்கனவே விலை உயர்த்தப்பட்டிருப்பதால் அதற்கு மேல் இனி விலையை கூட்ட முடியாது. அவ்வாறு கூட்டினால் வியாபாரம் பாதிக்கும். காய்கறி விலைகளும் கடந்த 2 வாரமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஓட்டல்களை நடத்த முடியாத அளவுக்கு தள்ளப்பட்டு வருகிறோம்.

இந்த நிலையில் வணிக சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்திருப்பது இன்னும் சவாலாக உள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் ஓட்டல்களை மூடுவதை தவிர வேறு வழி இல்லை.

இவர் அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com