

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள பூச்சியல் துறை சார்பில் உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்பட்டது.
விழாவில் பூச்சியியல் துறை தலைவர் முருகன் பேசுகையில், மக்கள் தேனீக்களை பற்றி புரிந்து கொண்டு தேனீக்களையும், அதன் வாயிலாக பூமியையும் பேணுவது முக்கியம் என்றார். பல்கலைக்கழக துணைவேந்தர்(பொ) சுப்பிரமணியன் வேளாண் பல்கலைக்கழக மாணவிகளின் பீகா என்ற தேன் மற்றும் தேன் மெழுகு சார்ந்த தயாரிப்புகளை விற்பனைக்கு தொடங்கி வைத்தார். விழாவில் தேனீக்களின் வகைகள், வாழ்க்கை முறை போன்ற அடிப்படைத் தகவல்கள், தொழில்வாய்ப்புகள் காட்சிபடுத்தப்பட்டிருந்தன. குழந்தைகளுக்கு ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது.
தேன் மெழுகை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மெழுகுவர்த்தி, சிலை, சோப்பு, லிப் பாம், கிராக் கிரீம், தேனில் மதிப்பு கூட்டப்பட்ட நெல்லி தேன், குல்கந்து, சுவையூட்டப்பட்ட தேன் ஆகியவையும் காட்சிபடுத்தப்பட்டு இருந்தன.
இந்த விழாவில் பங்கேற்ற பூச்சியியல் துறை 4-ம் ஆண்டு மாணவி பாக்கியலட்சுமி தாடி போன்று தனது முகம் முழுவதும் தேனீக்களை படரவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தார்.
தேனீக்களை பார்த்து அச்சப்பட தேவையில்லை. அவற்றை புரிந்து கொண்டு கையாளத் தெரிந்தால் போதும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏபிசு செரானா இண்டிகா எனப்படும் இந்தியத் தேனீக்களை 20 ஆயிரம் எண்ணிக்கையில் தனது முகத்தில் அவர் படரவிட்டிருந்தார். இது அங்கு வந்திருந்த பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. பார்வையாளர்கள் அவருடன் செல்பி புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.