

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலிக்கு நேரில் சென்று அதிரடி கள ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் மற்றும் 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட இரு கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் விரிவாகக் கேட்டறிந்தார். பின்னர், நெம்மேலி திட்டத்தின் குடிநீரை குடித்துப் பார்த்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், கடல்நீர் உறிஞ்சப்படும் தொழில்நுட்பம் முதல் அது சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் வரையிலான ஒட்டுமொத்தக் கட்டமைப்பு மற்றும் சென்னை மாநகருக்கான தினசரி குடிநீர் விநியோக அளவு திருப்திகரமாக உள்ளதா என்பதை அவர் நேர்முகமாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தின் பேரூர் பகுதியில் மிக பிரம்மாண்டமாக அமையவிருக்கும் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் கட்டுமானப் பணிகளையும் முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டார்.
நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் அதிநவீன திறன் கொண்ட இத்திட்டத்திற்கு, கடந்த திமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டப்பட்டு இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.
தற்போதைய சூழலில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன் 4,276 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்த மாபெரும் உள்கட்டமைப்புத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் எந்த அளவில் நிறைவடைந்துள்ளன, திட்டத்தை முழுமையாகச் செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதில் உள்ள சவால்கள் என்னென்ன என்பது குறித்து அங்கு வைக்கப்பட்டிருந்த வரைபடங்கள் மற்றும் மாதிரிகள் மூலம் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டார்.
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் பொறிக்கப்பட்ட திட்டக் கல்வெட்டு நெம்மேலி ஆலை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டதாக அண்மையில் எழுந்த பெரும் அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில், திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் மக்களின் அத்தியாவசியத் தேவையான குடிநீர் விநியோகத்தில் அரசியல் காரணங்களால் எவ்விதத் தொய்வும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதை உணர்த்தும் வகையில் முதலமைச்சரின் இந்த விசிட் அமைந்துள்ளது.
சென்னையின் எதிர்காலக் குடிநீர் தேவையைத் தீர்க்கும் இந்த மிக முக்கிய திட்டத்தின் எஞ்சிய பணிகளை எவ்விதத் தொய்வுமின்றி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அதிவிரைவாக முடித்து மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
முதலமைச்சரின் இந்தத் திடீர் கள ஆய்வு மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனைகள் அடங்கிய வீடியோ காட்சிகள் தற்போது ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் வரவேற்பை பெற்று வருகின்றன.