

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் நாளைமுதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நடைபெறவுள்ள ஜூலை - 2026 பத்தாம் வகுப்பு துணைத்தேர்வெழுத விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் நாளை முதல் (ஜூலை.2) www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று ஹால் டிக்கெட் என்ற வாசகத்தினை கிளிக் செய்த பின்னர் தோன்றும் பக்கத்தில்,
விண்ணப்ப எண், அல்லது நிரந்தர பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கு ஜூலை.3 மற்றும் 4ம் தேதிகளில் தேர்வு நடைபெற உள்ளது.
செய்முறைத் தேர்வு நடத்தப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களை செய்முறைப் பயிற்சி பெற்ற மையம்/ சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள்/ அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களில் அறிந்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
அறிவியில் செய்முறைப் பயிற்சி பெற்று ஜூலை - 2026 தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் தேர்வர்கள் மட்டுமே செய்முறைத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவர்.
தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்தபின்னர், தாங்கள் தேர்வெழுத வேண்டிய பாடங்கள் மற்றும் தேர்வு நடைபெறும் நாட்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் தேர்வர்கள் தேர்வு மற்றும் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு 9498383075/9498383074 ஆகிய கைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.